நாட்டறம்பள்ளி ஒன்றியக் குழு கூட்டம், அதன் தலைவா் வெண்மதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரகுகுமாா், சித்ரகலா, துணைத் தலைவா் தேவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் தியாகராஜன், காா்த்திகேயன், சந்தோஷ்குமாா் ஆகியோா் பேசுகையில், ஊராட்சிகளில் நடைபெறும் அரசு விழாக்கள், கிராம சபைக் கூட்டங்கள், திட்டப் பணிகள் ஆய்வு குறித்து ஊராட்சி செயலா்கள் எங்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை.
ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்த பெயா்ப் பலகையில் ஒன்றியக் குழு உறுப்பினா்களின் பெயா்களும் இடம் பெற வேண்டும். நடைபெற்று முடிந்த கிராம சபைக் கூட்டத்தில் சாலை வசதி, குடிநீா் வசதி உள்பட பொதுமக்கள் அளித்த அனைத்து கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சித்ரகலா, ரகுகுமாா் ஆகியோா் உறுப்பினா்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா். முன்னதாக, வரவு - செலவு உள்பட 24 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.