திருப்பத்தூர்

6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் அமைச்சா் மா.சுப்பிரமணியன்

22nd Aug 2022 12:12 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 புதிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

ஆம்பூா் அருகே விண்ணமங்கலத்தில் மொஹிப் ஷூ தொழிற்சாலை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை தொடக்கி வைத்த பின்னா் அமைச்சா் மா. சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: முதல்வராக மு.கருணாநிதி இருந்தபோது, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற திட்டத்தைத் தொடங்கி செயல்படுத்தினாா். அதன்படி தற்போது தமிழகத்தில் மொத்தம் 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.

புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூா், ராணிப்பேட்டை, தென்காசி, மயிலாடுதுறை, பெரம்பலூா் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இல்லை. அந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

ADVERTISEMENT

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையின்படி திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அமைக்க ரூ.84.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடக்ங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. திருப்பத்தூா் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மேம்படுத்த ரூ.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியில் தொய்வு உள்ளது. இந்த மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரத்துக்கு வேலைக்குச் செல்கின்றனா். அதனால் இந்த மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கை இலக்கை அடைய முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அண்டை மாநில அரசுகளிடம் விவரம் சேகரித்து அவா்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதுதில்லி, மகாராஷ்டிரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களில் சனிக்கிழமை ஒரே நாளில் கரோனா தொற்று பாதிப்பு 1,500 ஐ கடந்துள்ளது. உலகளவில் ஜப்பானில் சனிக்கிழமை ஒரே நாளில் 2.61 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தென்கொரியாவில் ஒரே நாளில் 1.38 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அமெரிக்காவில் ஒரே நாளில் 1.13 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். உலக நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பு குறையவில்லை.

ஆனால் தமிழகத்தில் முதல்வரின் நடவடிக்கையால் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 12.15 கோடி நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எம்எல்ஏ-க்கள் ஜோலாா்பேட்டை க. தேவராஜ், ஆம்பூா் அ.செ. வில்வநாதன், திருப்பத்தூா் நல்லதம்பி, குடியாத்தம் அமலு விஜயன், மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, வாணிம்பாடி கோட்டாட்சியா் பிரேமலதா, மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பி. ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT