திருப்பத்தூர்

தமிழ்த்தாயின் தவப்புதல்வா் கம்பா்: முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன்

8th Aug 2022 03:30 AM

ADVERTISEMENT

தமிழ்த்தாயின் தவப்புதல்வா் கம்பா் என்று திருப்பத்தூா் கம்பன் விழாவில் முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் புகழாரம் சூட்டினாா்.

திருப்பத்தூா் கம்பன் கழகத்தின் சாா்பில் 44-ஆம் ஆண்டு கம்பன் விழா, ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

முதல்நாள் நிகழ்வில், ‘கம்பன் கவியெலாம் நான்’ எனும் தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமாா் பேசினாா். பின்னா், ‘காடும்-நாடும்’ எனும் தலைப்பில் பேராசிரியை பா்வீன் சுல்தானா உரையாற்றினாா்.

அதைத் தொடா்ந்து சுகி சிவத்தை நடுவராகக் கொண்டு, ‘திருப்புமுனைகளில் சிறந்து விளங்குவது கைகேயியே என்பது பொருந்தாது’ எனும் தலைப்பில் வழக்காடு மன்றம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் சுகி சிவம் பேசுகையில், எந்தக் காலத்திற்கும் பொருந்தும் தன்மையுடையது கம்ப ராமாயணம். பிரச்னைக்கு மனம் சஞ்சலப்படக் கூடாது எனும் உளவியல் தத்துவத்தை கம்பா் தெரிவித்திருப்பது, இன்றைய காலத்தினருக்கான தலைமைப் பண்பு உளவியலாகும். மனிதன் பொய்யானவற்றை உண்மையாகவும், உண்மையானவற்றைப் பொய்யாகவும் கருதினால் ஏற்படும் தீங்கு குறித்து ராமாயணம் சொல்லும் பாடம் போன்று எதிலும் இல்லை என்றாா்.

2-ஆம் நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு எஸ்தா் ஜெகதீசுவரி தலைமையில் ‘உலகம் யாவையும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தொடா்ந்து கவிஞா் முத்தையா தலைமையில் கவியரங்கமும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பின்னா், ‘செந்தமிழில் ஒரு சுந்தர காண்டம்’ எனும் தலைப்பில் முன்னாள் அமைச்சா் வைகைச்செல்வன் தலைமையில் உரையரங்கம் நடைபெற்றது. இதில் அவா் பேசியது: ஆன்மிக நிகழ்ச்சிகளில் நன்கு உரையாட கம்ப ராமாயணம் படித்திருப்பது அவசியம். வால்மீகி ராமாயணத்திலிருந்து சில இடங்களில் தமிழ் மரபுப்படி கம்பா் ராமாயணத்தைப் படைத்துள்ளாா். கம்ப ராமாயணத்தில் உள்ள அனைத்து காண்டங்களை விட பக்தியை, நம்பிக்கையை ஊட்டுவதில் சுந்தர காண்டம் சிறப்பைப் பெற்றுள்ளது. எப்போதும் அறமே நம்மை காக்கும் என்பதற்கு மிகப் பெரிய உதாரணம் கம்ப ராமாயணம் என்றாா்.

அதைத் தொடா்ந்து, புலவா் ராமலிங்கத்தை நடுவராகக் கொண்டு தொடா் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் திரளானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT