திருப்பத்தூர்

கோயில் இடத்தை மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

6th Aug 2022 10:07 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே கோயில் இடத்தை மீட்டுத் தரக் கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூரை அடுத்த விஷமங்கலம் அருகே ஆதிதிராவிடா் காலனியில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடம் அந்தப் பகுதியில் உள்ளது. அந்த இடத்தை மாற்று சமுதாயத்தினா் சிலா் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், கோயிலில் அவ்வப்போது நடக்கும் திருவிழாவின் போது, இரு சமூகத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை இரவு ஆடி வெள்ளியை முன்னிட்டு கோயிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், இரு தரப்பைச் சோ்ந்த 5-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளை அகற்ற வலியுறுத்தி, 100-க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை திருப்பத்தூா்-திருவண்ணாமலை பிரதான சாலை விஷமங்கலம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தை அவா்கள் சிறை பிடித்தனா்.

தகவலறிந்து வந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் தொடா்புடைய துறை அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில், பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனா்.

இந்த மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT