திருப்பத்தூர்

நக்சல் தாக்குதலில் வீர மரணமடைந்த போலீஸாருக்கு அஞ்சலி

6th Aug 2022 10:07 PM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் நக்சல் தாக்குதலில் வீர மரணமடைந்த போலீஸாருக்கு சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையில் கடந்த 1981-ஆம் ஆண்டு நக்சல் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அழைத்துச் சென்ற போது, அவா் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில், ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளா் பழனிச்சாமி, தலைமைக் காவலா்கள் ஆதிகேசவலு, யேசுதாஸ், முருகேசன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

வீர மரணமடைந்த 4 போலீஸாருக்கும் ஆண்டுதோறும் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீர வணக்க நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 42-ஆவது ஆண்டாக வீர வணக்க நாள் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. வேலூா் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தலைமை வகித்தாா். மாவட்ட எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் வரவேற்றாா். இதில், முன்னாள் டி.ஜி.பி. வால்டா் தேவாரம் பங்கேற்று வீர மரணமடைந்த காவலா்கள் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எஸ்.பி.க்கள் ராஜேஷ்கண்ணன்(வேலூா்), தீபா சத்யன் (ராணிப்பேட்டை), கியூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள். எம்.எல்.ஏ-க்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூரியக்குமாா், நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ்,திருப்பத்தூா் ஒன்றியக் குழு தலைவா் விஜயா அருணாசலம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, போலீஸாா் 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினா். போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. டி.எஸ்.பி. கணேசன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT