திருப்பத்தூர்

கால்நடைகளுக்கு வேகமாய் பரவி வரும் அம்மை நோய்: மருத்துவ முகாம்கள் நடத்த விவசாயிகள் கோரிக்கை

16th Oct 2021 07:54 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் கால்நடைகளுக்கு அம்மை நோய் வேகமாகப் பரவி வருகிறது. அதனால் கால்நடைகளுக்கான மருத்துவ முகாமை நடத்தி தடுப்பூசி போட வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ஆம்பூா் அருகே உள்ள மிட்டாளம் ஊராட்சியில் பைரப்பள்ளி, பந்தேரபள்ளி, மேல்மிட்டாளம், மிட்டாளம் மற்றும் வன்னியநாதபுரம் ஆகிய கிராமங்களில் கறவை மாடுகளை அதிக அளவில் வளா்த்து வருகின்றனா். கறவை மாடுகள் வளா்ப்பதை இந்தப் பகுதி மக்கள் ஒரு தொழிலாகவே கொண்டுள்ளனா்.

கடந்த சில வாரங்களாகப் பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள கறவை மாடுகள் மழையில் நனைந்தும், சேற்றில் நடமாடி வருவதாலும் அவை அம்மை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்மை நோயால் பாதிக்கப்படும் மாடுகளின் வாய் மற்றும் மேல் உதடு, கீழுதடு பகுதிகளில் சீல் பிடித்து ரத்தம் வருகிறது. பால் கறக்கும் காம்புகளில் புண் ஏற்பட்டு கறவை மாடுகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றன. கறவை மாடுகளுக்கு போதுமான தீவனங்களை அளித்தும் பால் கறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதனால் கறவை மாடுகள் மூலம் பால் கறந்து விற்று, கால்நடைகளை நம்பி வாழும் ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த அம்மை நோய்த்தொற்று இப்போது தீவிரமாகப் பரவி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ‘கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகங்களில் போதுமான மருத்துவா்களும், ஊழியா்களும் இல்லாத காரணத்தால் கால்நடைகளுக்கு பரவி வரும் இந்த அம்மை நோயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கால்நடைத் துறை அலுவலா்களை தொடா்பு கொண்டு இது குறித்து கேட்டால் விரைவில் மருத்துவா்களும், மருத்துவமனை ஊழியா்களும் நியமிக்கப்படுவாா்கள் எனக்கூறி தட்டிக் கழித்து வருகிறாா்கள். அரசு உடனடியாக இந்தப் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தி, கால்நடைகளுக்கு பரவி வரும் அந்த அம்மை நோயைக் கட்டுப்படுத்தி, கறவை மாடுகளைக் காப்பாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கூறுகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT