ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்காக, ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட நெக்னாமலைக்கு வாக்குப் பதிவுக்கான உபகரணங்களுடன் தோ்தல் அலுவலா்கள் 7 கி.மீ. தூரமுள்ள மலைப் பாதையில் கொண்டு சென்றனா்.
வாக்குச் சாவடி மையங்களுக்கு உபகரணங்கள் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவகத்திலிருந்து அனுப்பும் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியரும் அமா் குஷ்வாஹா வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். அப்போது, மகளிா்த் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, தோ்தல் நடத்தும் அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இந்த நிலையில், தரைமட்டத்திலிருந்து சுமாா் 2, 500 அடி உயரமுள்ள நெக்னாமலைக் கிராமத்தில் 528 வாக்காளா்கள் உள்ளனா். இந்த மலைக்கு சாலை வசதிகள் இல்லை. தரையிலிருந்து 7 கி.மீ. தூரமுள்ள மலைபாதை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை காலை நெக்னாமலை பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்குத் தேவையான உபகரணங்களை அரசு அலுவலா்கள், போலீஸாா் 7 கி.மீ. தூரமுள்ள மலைபாதை வழியாக எடுத்துச் சென்றனா்.