திருப்பத்தூர்

திருப்பத்தூா் அருகே நிலக்கொடைக் குறியீடுகள் அடங்கிய கல்வெட்டு கண்டெடுப்பு

9th Oct 2021 07:54 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே நிலக் கொடைக் குறியீடுகள் அடங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரிப் பேராசிரியா் ஆ.பிரபு, ஆய்வு மாணவா்களான தரணிதரன், கிருஷ்ணகுமாா், விஷ்ணு, ஞானவேல் ஆகியோா் திருப்பத்தூா் அருகிலுள்ள மூக்கனூா் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, வைணவக் கோயில்களுக்கு நிலக்கொடை கொடுத்ததற்கான ஆவணமாக அறியப்படும் குறியீடுகள் அடங்கிய பாறையினைக் கண்டறிந்தனா்.

இது குறித்து ஆ.பிரபு கூறியது:

பழங்காலத் தமிழகத்தை ஆட்சிபுரிந்த மன்னா்கள், சிற்றரசா்கள், வள்ளல்கள் தங்களது ஆட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு நிலங்களை தானமாக வழங்குவது மரபு. அவ்வாறு வழங்கும் கொடைகளுக்குச் சான்றாக கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் வாயிலாக எழுத்துப்பூா்வ அதிகாரத் தகவல்களைத் தெரிவிப்பா். அவ்வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பல கண்டறியப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில், திருப்பத்தூா் வட்டாரத்தில் பழந்தமிழரின் வாழ்வியல் பதிவுகளை விவரிக்கும் எண்ணற்ற தடயங்கள் அண்மைக் காலத்தில் கண்டறியப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

மூக்கனூா் பகுதியில் மேலக்குட்டை ஏரியின் கீழ்புறம் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் நடுவே இயற்கையாக அமைந்துள்ள சிறிய பாறையில் குறியீடுகள் பல இருப்பதைக் கண்டறிந்தோம்.

முக்கோண வடிவமுடைய பாறையில் சூரியன், பிறைச் சந்திரன் உருவங்கள் மேற்புரமும், கீழே குடையும் அருகே கமண்டலமும் அமைந்துள்ளன. இவற்றின் அருகே அளவுகோலும், பாதங்களும் காட்டப்பட்டுள்ளன. இக்குறியீடுகள் திருமாலின் வாமன அவதாரத்தினைக் குறிப்பிடுவதாகும்.

பொதுவாக சாசனங்கள் எழுத்து வடிவில் பொறிக்கப்படுவது மரபு. இதற்கு மாறாக இங்கே கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. இந்தக் கோட்டோவியக் கல்லானது ஒருவா் தமது ஆட்சிக்குள்பட்ட நிலத்தினை வைணவக் கோயிலுக்காகக் கொடையாகக் கொடுத்த விவரத்தினை இக்குறியீடுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இங்குள்ள ஓவியத்தில் மேலுள்ள சந்திர, சூரிய உருவங்கள் இக்கொடைக்குச் சாட்சிகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. அவை உள்ளவரையிலும் என்று பொருள்படும்.

இக்கோட்டோவியக் கல்லானது கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இக்கோட்டோவியம் இவ்வட்டார வரலாற்றுப் பின்புலத்தினைப் பறைசாற்றும் சிறப்புக்குரிய ஆவணமாகும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT