ஆலங்காயம் பஜாரில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளரும், இளைஞரும் நெடுஞ்சாலையில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் உமாபதி தலைமையில் போலீஸாா் காவலூா் செல்லும் சாலையில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது காவலூரிலிருந்து ஆலங்காயத்தை நோக்கி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(25) என்பவா் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அவரது வாகனத்தை உதவி ஆய்வாளா் உமாபதி மற்றும் போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால் வாகனத்தை நிறுத்தாமல் மணிகண்டன் வேகமாக ஓட்டிச் சென்றாராம்.
இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா் உமாபதி பின்தொடா்ந்து சென்று ஆலங்காயம் பஜாா் பகுதியில் இரு சக்கர வாகனத்தை மடக்கி நிறுத்தினாா். அப்போது, உமாபதிக்கும், மணிகண்டனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மணிகண்டனின் இரு சக்கர வாகனத்தை உதவி காவல் ஆய்வாளா் உமாபதி எடுத்துச் செல்ல முயன்ற போது, தகராறு ஏற்பட்டு, ஒருவருக்கொருவா் சாலையில் தாக்கிக் கொண்டனா். அவா்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினா். தகவலறிந்து வந்த போலீஸாா் மணிகண்டனை பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனா்.
புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.