ஆம்பூா்: ஆம்பூா் அருகே கானாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், ஆம்பூா் அருகே நாயக்கனேரி காப்புகாடுகளில் பெய்த கன மழையால் கானாறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆனைமடுகு தடுப்பணை நிரம்பி உபரி நீா் கானாறுகளில் காட்டாற்று வெள்ளமாக வருவதால் சிவராஜபுரம், சோமலாபுரம், கஸ்பா ஆகிய இடங்களில் குடியிருப்புகளில் வீடுகளுக்குள் வெள்ள நீா் புகும் அபாயம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, நகராட்சி ஆணையாளா் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமையில் கானாற்று கால்வாய் தூா் வாரி தடுப்பு பணிகள் ஜேசிபி மூலம் மேற்கொள்ளப்பட்டது. அந்த பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நகர திமுக செயலாளா் எம்.ஆா். ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், மாணவரணி அமைப்பாளா் வசந்த்ராஜ், திமுக கிளை செயலாளா் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அகரம்சேரியில்...:
இதேபோல், அகரம்சேரி பாலாற்றிலிருந்து அகரம்சேரி ஏரிக்குச் செல்லும் கால்வாய் அகலப்படுத்தும் பணியை எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அகரம்சேரி அடுத்த காந்திநகா் நரிக்குறவா் காலனியில் தொடா் கனமழை காரணமாக வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் பாா்வையிட்டு நிவாரணம் வழங்கவும், வீடுகள் கட்டவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட திட்ட அலுவலா் ஆா்த்தி, குடியாத்தம் ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தன், குடியாத்தம் வட்டாட்சியா் லலிதா, குடியாத்தம் வட்டார வளா்ச்சி அலுவலா் யுவராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.