ஆம்பூா்: ஆம்பூா் அருகே அரங்கல்துருகம் கிராமத்தில் நடந்த மனு நீதி நாள் முகாமில் ரூ.74.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி புதன்கிழமை வழங்கப்பட்டது.
சிறப்பு மனுநீதி நாள் முகாமிற்கு தலைமை வகித்து 192 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா பேசியது :
கரோனா பரவல் இருப்பதால் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம். முகக் கவசம் நோய் தொற்றில் இருந்து காப்பாற்றும். தமிழ்நாடு மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட மாவட்டத்தில் நமது மாவட்டம் 35-ஆவது இடத்தில் உள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பதாக 38-ஆவது இடத்திலிருந்து தற்பொது 35-ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. நமது மாவட்டத்தில் 70 சதவீத மக்கள் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தித் கொண்டுள்ளனா். 40 சதவீத மக்கள் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா்.
இன்னும் நமது மாவட்டத்தில் 2 லட்சம் தடுப்பூசி இருப்பில் உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா். 100 சதவீத கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட கிராமத்திற்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் அறிவிப்பின்படி தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும். ஆம்பூா் தொகுதியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் 10 கிராம ஊராட்சிகளுக்கு கூடுதலாக ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கு.செல்வராசு, மாதனூா் ஒன்றியக்குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவா் பானுமதி ஆகியோா் கலந்து கொண்டனா்.