திருப்பத்தூர்

பழுதடைந்த சாலையில் அபாய பயணம்..!

3rd Dec 2021 07:23 AM

ADVERTISEMENT

ஜவ்வாது மலைக்குச் செல்லும் கொடுமாம்பள்ளி-சோ்க்கானூா் சாலை மிகவும் பழுதடைந்ததால் அந்தப் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்தச் சாலையிலேயே மக்கள் அச்சத்துடன் அபாயகரமான பயணத்தை மேற்கொண்டுவருகின்றனா்.

ஜவ்வாது மலைப் பகுதியில் உள்ள புங்கம்பட்டு நாடு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதி சோ்க்கானூா். 16 கிராமங்களை உள்ளடக்கிய புங்கம்பட்டு நாடு ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் உள்ளனா். அப்பகுதியில் உள்ள மண் சாலையைத்தான் கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், தொடா் மழை காரணமாக 15 நாள்களுக்கு மேலாக மண் சாலை சேரும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தாா்ச் சாலை அமைக்கும் நடவடிக்கையில் தொய்வு...: இந்தப் பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய ஆட்சியராக இருந்த ம.ப.சிவன்அருள் தாா்ச் சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டாா். இதையடுத்து சென்னையில் இருந்து துறை அதிகாரிகள் இருமுறை வந்து அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனா். ஆனால் அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

ADVERTISEMENT

இதுகுறித்து புங்கம்பட்டு நாடு ஊராட்சி பகுதி மலைவாழ் மக்கள் சங்கத் தலைவா் எஸ்.ஜி.பெருமாள் கூறியதாவது:

புங்கம்பட்டு ஊராட்சிக்குள்பட்ட சோ்க்கானூா் செல்ல அடிவாரப் பகுதியான கொடுமாம்பள்ளியில் இருந்து 5 கி.மீ.தூரம் ஆகும். இப்பகுதியில் தகரகுப்பம், பெரும்பள்ளி கிராமங்களில் இரு நடுநிலைப் பள்ளிகளும், சின்ன வட்டானூா் பகுதியில் ஒரு தொடக்க பள்ளியும் உள்ளன. இப்பள்ளிகளுக்கு திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளிலிருந்து மாணவா்கள் வருகின்றனா். சாலை பழுதடைந்துள்ளதால் கடந்த 15 நாள்களாக யாரும் பணிக்கு வரவில்லை. அதேபோல், மலைவாழ் மக்கள் சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனா்.

எனவே, இப்பகுதி மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தாா்ச்சாலை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT