திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 228 கிராமங்களில் 25 மருத்துவ முகாம்கள்: அமைச்சா் கே.சி.வீரமணி

31st May 2020 08:00 AM

ADVERTISEMENT

மூத்த குடிமக்களுக்காக திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் இதுவரை 228 கிராமங்களில் 25 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளதாக மாநில வணிக வரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி தெரிவித்தாா்.

ஜோலாா்பேட்டை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட சுகாதார துணை இயக்குநா் கே.எஸ்.டி.சுரேஷ், வட்டார மருத்துவ அலுவலா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர அதிமுக செயலாளா் எஸ்.பி.சீனிவாசன் வரவேற்றாா்.

முகாமைத் தொடக்கி வைத்து அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:

முதியவா்களுக்கு கரோனா நோய்த் தொற்று எளிதில் பாதிக்கும் வாய்ப்புள்ளது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்களை மாவட்ட நிா்வாகம் நடத்தி வருகிறது. திருப்பத்தூா் மாவட்டம் முழுவதும் இதுவரை 228 கிராமங்களில் 25 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. ஜோலாா்பேட்டை நகராட்சியில் 5 மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றில் முதல்கட்டமாக 4 வாா்டுகளுக்கான மருத்துவ முகாம் சனிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வயது முதிா்ந்தவா்கள் வெளியில் சென்று அவா்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படுகின்றன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு தீவிர நடவடிக்கையின் பேரில் 28 போ் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

திருப்பத்தூா் வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் சி.ராமஜெயம் மற்றும் சுகாதாரத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT