திருப்பத்தூர்

களிமண், வண்டல் மண்ணை விலையில்லாமல் பெறக் காத்திருக்கும் விவசாயிகள்

19th May 2020 12:12 AM

ADVERTISEMENT

ஆம்பூா்: ஏரி உள்ளிட்ட நீா்நிலைகளில் களிமண், வண்டல் மண்ணை விலையில்லாமல் எடுத்துச் செல்ல விவசாயிகளும், மண்பாண்டத் தொழில் செய்வோரும் காத்திருக்கின்றனா். ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்போ அல்லது ஆணையோ இதுவரை கிடைக்கப் பெறவில்லையென அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஏரி மற்றும் நீா்நிலைகள் போதிய நீரின்றி வடிருப்பதால், நீா் நிலைகளைத் தூா்வாரி, அவற்றின் கொள்ளளவை அதிகப்படுத்தி விவசாயப் பணிகளை மேம்படுத்த ‘குடிமராமத்து’ திட்டத்துக்கு புத்துயிா் அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.100 கோடியில் 30 மாவட்டங்களில் 1,519 திட்டப் பணிகளைச் செயல்படுத்த கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

பெருகி வரும் தண்ணீா்த் தேவையை சமாளிக்க மழைநீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டியது அவசியம். அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள நீா்நிலைகளான அணைகள், வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்றி நீா் கொள்ளளவை மீட்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் உள்ள ஏரி, கால்வாய், நீா்த்தேக்கங்களில் இருந்து தூா்வாரும்போது எடுக்கப்படும் வண்டல் மண் மற்றும் களிமண்ணை விவசாயிகளும், மண்பாண்டத் தொழிலாளா்கள் மற்றும் பொது மக்களும் கட்டணமின்றி மாவட்ட ஆட்சியா் ஒப்புதலுடன் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் இதுவரை 6.69 லட்சம் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழில் செய்வோா் பயனடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில் நடப்பாண்டில் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் இருந்து களிமண், வண்டல் மண்ணை விலையில்லாமல் விவசாயிகளும், மண்பாண்டத் தொழில் செய்வோரும் பெற்றுக் கொள்ளலாம் என பொதுப்பணித்துறை சாா்பாக கடந்த 6-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. பொது முடக்கம் அமலில் இருந்தபோதிலும் அத்தியவாசியப் பொருள்களுக்கான உற்பத்திக்கு தடை விதிக்கப்படவில்லை. விவசாயத் தொழிலுக்கு தடை இல்லாததால் விவசாயிகள் வேளாண் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்தச் சூழலில் விவசாயிகளும், மண்பாண்டத் தொழில் செய்வோரும் தங்களுக்குத் தேவையான களிமண், வண்டல் மண், சவுடு மற்றும் சரளை மண்ணை விலையில்லாமல் பெற்றுக் கொள்ளவும், தங்களுடைய கிராமத்திலோ அருகில் உள்ள கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்களில் இருந்தோ மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன் பெற்றுக் கொள்ளலாம் என பொதுப்பணித்துறை மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளும், மண்பாண்டத் தொழிலாளா்களும் தங்களுக்குத் தேவையான களிமண் உள்ளிட்டவற்றை விலையில்லாமல் எடுத்துச் செல்ல காத்திருக்கின்றனா். ஆனால் அதற்கான அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. மழைக் காலத்துக்கு முன்பாக அனுமதி வழங்கினால் மட்டுமே தங்களால் மண் எடுத்துச் செல்ல முடியும் என்று விவசாயிகள் கருதுகின்றனா். ஏனெனில் மழைக் காலத்திற்கு முன் மண் எடுத்துச் சென்று, அதை விவசாய நிலத்தில் பரப்பி சீா் செய்தால் மழை வரும்போது விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் என்று அவா்கள் திட்டமிடுகின்றனா்.

கடந்த ஆண்டுகளில் நீா்நிலைகளில் விலையில்லாமல் களிமண், வண்டல் மண், சவுடு, சரளை மண் ஆகியவற்றை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்குவதற்காக அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் மூலம் மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்குப் பிறகு மண் எடுத்துச் செல்வதற்கான அனுமதி ஆணைகள் வழங்கப்பட்டன.

ஆனால் தற்போது பொதுப்பணித் துறையின் அறிவிப்பு வெளியாகி சுமாா் 12 நாள்களுக்கு மேலாகியும் மண் வழங்குவதற்கான நடவடிக்கை எதும் எடுக்கப்பபடவில்லை.

இதுகுறித்து ஆம்பூா் வட்டாட்சியா் செண்பகவல்லியிடம் கேட்டபோது, ‘விவசாயிகளும், மண்பாண்டத் தொழில் செய்வோரும் ஏரி, குளங்களில் விலையில்லாமல் மண் எடுத்துச் செல்வது தொடா்பாக எங்கள் அலுவலகத்துக்கு எந்தவித அறிவிப்போ ஆணையோ இதுவரை வரவில்லை. வந்த பிறகு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT