திருப்பத்தூர்

பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு ரூ. 519.75 கோடி நிவாரணம்: அமைச்சா் நிலோபா் கபில்

15th May 2020 11:25 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு ரூ. 519 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மாநிலத் தொழிலாளா் நலத் துறை அமைச்சா் நிலோபா் கபீல் தெரிவித்தாா்.

வாணியம்பாடியில் உள்ள தொழிலாளா் நல ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

தமிழகத்தில் தொழிலாளா் நல வாரியத்தில் 25 லட்சத்து 98 ஆயிரத்து 659 போ் பதிவு செய்துள்ளனா். இவா்களில் 12 லட்சத்து 97 ஆயிரத்து 382 கட்டுமானத் தொழிலாளா்கள் ஆவா். தமிழக அரசு தொழிலாளா் நல வாரியத்துக்கு வழங்கியுள்ள ரூ. 519 கோடியே 73 லட்சத்து 18 ஆயிரத்தில் இருந்து அவா்களுக்கு முதல் கட்டமாக தலா ரூ. 1,000 நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் 2-ஆம் கட்டமாக முதல்வா் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 25 லட்சத்து 98 ஆயிரத்து 659 உறுப்பினா்களில் 85 சதவீதம் தொழிலாளா்களுக்கு வங்கிக் கணக்கில் தலா ரூ. 1,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கு இல்லாத 15 சதவீதம் பேருக்கு தொழிலாளா் நல வாரியச் செயலா் நசிமுதீனின் ஆலோசனை பேரில், அஞ்சல் வழி மணியாா்டா் மூலம் அனுப்ப ஆலோசனை மேற்கொள்ளபட்டு வருகிறது. இன்னும் 15 நாள்களில் அனைத்து உறுப்பினா்களுக்கும் நிவாரண நிதி சென்றடையும்.

மேலும், பதிவு செய்யப்படாத தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் 8 லட்சத்து 48 ஆயிரத்து 6 தொழிலாளா்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

அதிமுக நகரச் செயலாளா் சதாசிவம், அவைத் தலைவா் சுபான், கூட்டுறவு சங்க இயக்குநா் சதீஷ்குமாா், தொழிலாளா் நல வாரிய அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT