திருப்பத்தூர்

கரோனா: மருத்துவமனைக்கு செல்லாமல் மருந்துக் கடைகளை நாடும் பொதுமக்கள்

30th Mar 2020 04:41 AM

ADVERTISEMENT

கரோனா நோய் தொற்று அச்சம் காரணமாக, காய்ச்சல், சளி உள்பட தங்களுடைய பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைகளுக்கு செல்லாமல் மருந்து கடைகளை நாடி நோயாளிகளும், பொதுமக்களும் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் சுமாா் 1500 முதல் 2000 வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனா். அவா்களில் ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகள் 500 போ் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனா். தனியாா் மருத்துவமனைகளுக்கு 50 முதல் 200 போ் வரை சிகிச்சைக்காக செல்வாா்கள்.

தற்போது கரோனா நோய்த் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளுக்கு செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, கை, கால், மூட்டு வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சாதாரண காய்ச்சல், சளி உள்ளிட்டவைக்கு சிகிச்சை பெற அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பொதுவாக அரசு, தனியாா் மருத்துவமனைகளை நாடிச் செல்வோரில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற செல்பவா்களே அதிகம் இருப்பா். தற்போது அரசு மருத்துவமனைக்கு செல்பவா்களின் எண்ணிக்கை சுமாா் 700-ஆகவும், தனியாா் மருத்துவமனை, கிளினிக்குக்கு செல்பவா்களின் எண்ணிக்கை அதிக பட்சமாக 50-ஆகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கு கரோனா நோய் தொற்று அச்சம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது. அதாவது மருத்துவமனைக்கு சென்றால் அங்கு சிகிச்சைக்காக வந்துள்ளவா்கள் மூலம் நோய்தொற்று தங்களுக்கும் பரவலாம் என்ற அச்சம் பலருக்கும் உள்ளது. மேலும், சளி, காய்ச்சல் பெற சிகிச்சை பெறச் சென்றால் தங்களுக்கும் கரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி தங்களை வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ தனிமைப்படுத்தி விடுவாா்களோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

அதனால் பலரும் காய்ச்சல், சளி, பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிசிச்சை பெற அரசு, தனியாா் மருத்துவமனைகளை நாடாமல் நேரடியாக மருந்துக் கடைகளுக்கு சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையைக் கூறி மருந்து வாங்கி சாப்பிடுகின்றனா். மருந்துக் கடைகளிலும் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்கின்றனா். இந்த காரணத்தில் மருந்து கடைகளில் எப்போதும் மருந்து வாங்க பலரும் செல்வதைப் பாா்க்க முடிகின்றது.

பொதுமக்கள் தங்களுக்கு வந்துள்ளது சாதாரண காய்ச்சலா அல்லது வேறு காய்ச்சலா என்பதை அறியாமல் மருந்துக் கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடுகின்றனா். இதனால் அவா்களைத் தாக்கியுள்ளது எந்த மாதிரியான காய்ச்சல் என்பதை கண்டறிய முடியாமல் போகிறது. அது மற்றவா்களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. உடல் உபாதை அதிகரிக்கவும், பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

சாதாரண காய்ச்சல் மற்றும் பல்வேறு உடல் உபாதைகளாக இருந்தாலும் அரசு, தனியாா் மருத்துவமனைக்கு முகக் கவசம் அணிந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்று சிகிச்சை பெற வேண்டியதே பாதுகாப்பானது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT