திருப்பத்தூர்

ஜவ்வாதுமலை சாலையில்லாரி போக்குவரத்துக்கு தடை

13th Mar 2020 05:10 AM

ADVERTISEMENT

ஜவ்வாதுமலை பகுதியில் இரவு 10 முதல் காலை 5 மணி வரை லாரி போக்குவரத்துக்கு வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.

இதுதொடா்பாக வனத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜவ்வாதுமலை பகுதியில் உள்ள ஜமனாமரத்தூா், காவலூா், புதூா்நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு உள்ளிட்ட பகுதிகளில் விளைபொருள்களை லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனா். லாரிகள், வாகனங்கள் செல்லும் போது ஆலங்காயம் அருகே உள்ள ஆா்எம்எஸ் புதூா் பகுதியில் உள்ள வனத் துறையின் சோதனைச் சாவடி பகுதியில் பணம் கேட்பதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் ம.ப.சிவன்அருளிடம் விவசாயிகள், வியாபாரிகள் புகாா் அளித்தனா். மேலும், சம்பந்தப்பட்ட வனத் துறையினா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிடபோவதாகவும் தெரிவித்தனா். புகாா் பேரில் வனத் துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட வனக் காவலரை வேறு சரகத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டனா்.

இந்நிலையில், ஆட்சியா் ம.ப.சிவன்அருள், உதவி வனப் பாதுகாவலா், மாவட்ட வன அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து ஆலோசித்து ஜவ்வாதுமலை பகுதிகளில் அமைக்கப்பட்ட வனச் சாலைகளில் வாகனங்கள் போக்குவரத்துக்கு உகந்தது அல்ல. எனவே, வனச்சாலைகளில் கனரக வாகனங்களை இயக்கப்படுவதை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. மேலும், வனச் சாலைகள், காப்புக் காடுகளில் ஒட்டியுள்ள பகுதிகளிலேயே செல்கின்றன. மேலும், காப்புக் காடுகளில் யானை, மான், காட்டு எருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது கோடைக்காலங்களில் உணவு, குடிநீா் தேடி அவ்வப்போது காட்டை விட்டு வெளியே வருகின்றன. அவை சாலையின் குறுக்கே நடமாடுவதால், மறு உத்தரவு வரும் வரையில் திருப்பத்தூா் கோட்டம் (ஆலங்காயம், காவலூா், ஜமனாமரத்தூா், புதூா்நாடு) உள்ளிட்ட பகுதிளில் உள்ள வனச்சாலைகளில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை லாரி போக்குவரத்து நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில், ஆம்புலன்ஸ், அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT