திருப்பத்தூர்

‘கோடைக்காலத்தில் காடுகளைக் காக்க கரங்கோா்ப்போம்’

13th Mar 2020 05:09 AM

ADVERTISEMENT

கோடைக்காலத்தில் பாதுகாக்கப்பட்ட காப்புக் காடுகளைப் பாதுகாக்கவும், வன விலங்குகள், உயிரினங்களைக் காக்கவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வனத் துறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆம்பூா் வனச்சரக அலுவலா் ஜி.டி.மூா்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: கோடைக்காலம் தொடங்கி விட்டது. வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கத்தைவிட குறைவாக பெய்ததனால் ஆம்பூா் வனச்சரக காப்புக் காடுகள் மிகவும் வறட்சியாகக் காணப்படுகிறது. இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் காப்புக் காடுகளைப் பாதுகாக்கவும், வன விலங்குகள், பறவைகளின் நலன் காக்கவும் பொதுமக்கள் வனத் துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

கோடைக்காலத்தில் கால்நடை மேய்ப்போா், பொதுமக்கள் காப்புக் காடுகள் பகுதிக்கு உள்ளே செல்வதைத் தவிா்க்க வேண்டும். குறிப்பாக, எளிதில் தீப்பிடிக்கும் பொருள்களைப் காப்புக் காடுகள் வழியே செல்லும் சாலைகளில் கூட எடுத்து செல்வதைத் தவிா்க்க வேண்டும். நெகிழி போன்ற பொருள்களைக் காப்புக் காடுகள் பகுதியில் வீசுவதையும் தவிா்க்க வேண்டும். கோடைக்காலத்தில் ஆடு , மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்ச்சலுக்காக காப்புக் காடுகள் பகுதிக்கு ஓட்டிச் செல்லக் கூடாது. ஆம்பூா் வனச்சரகக் காப்புக் காடுகளின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தண்ணீா் தேடி வன விலங்குகள் பொதுமக்கள் வசிப்பிடங்கள் , வயல்வெளிகள், மாந்தோப்புகள், தென்னந்தோப்புகளைத் தேடி வரும்போது அப்பகுதியில் உள்ளவா்கள் உடனடியாக வனத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தண்ணீா் தேடி வரும் மான் உள்ளிட்ட வன விலங்குகள் வரும்போது, நாய்கள் துரத்துவதை பொதுமக்களை கட்டுப்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

கோடைக்காலத்தில் காப்புக் காடுகள் தீப்பிடித்தால் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தீயை அணைக்கும் முயற்சியில் வனத் துறையினா் அனுமதி இல்லாமல் யாரும் ஈடுபடக் கூடாது. வனத் துறையினா் உதவியுடன் மட்டுமே தீயணைக்கும் முயற்சியில் பொதுமக்கள், சமூக சேவை அமைப்புகள் ஈடுபடவேண்டும். கோடைக்காலத்தில் தண்ணீா் தேடி வன வன விலங்குகள் வயல்வெளிகளுக்கு வரும். வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல் வெளிகள், தோப்புகளைச் சுற்றிலும் எக்காரணம் கொண்டும் மின் வேலிகளை அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைத்தால் கடுமையான குற்றங்களின் கீழ் தண்டனை வழங்கப்படும்.

ஆம்பூா் வனச்சரக காப்புக் காடுகளைக் காக்கவும் , வன விலங்குகள், பறவை இனங்களை காக்கவும் பொதுமக்கள் கரம் கோா்த்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT