திருப்பத்தூர்

‘2011 தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறையை பின்பற்ற வேண்டும்’

6th Mar 2020 12:55 AM

ADVERTISEMENT

ஆம்பூா்: தேசிய மக்கள் தொகை பதிவேடு-2011 நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலரும், கடையநல்லூா் தொகுதி எம்எல்ஏவுமான அபுபக்கா் தெரிவித்தாா்.

ஆம்பூரில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம், அஸ்ஸாம் மாநிலத்துக்கான என்ஆா்சி ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து 6 மாநில சட்டப் பேரவைகளில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு புதிய நடைமுறையை அமல்படுத்தமாட்டோம் என 15 மாநிலங்கள் முடிவெடுத்துள்ளன.

தமிழகத்திலும் புதிய தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறைப்படுத்தாமல் கடந்த 2011-ஆம் ஆண்டின் நடைமுறையைப் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் வரும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். இத்தீா்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்ற வேண்டுமென திமுக, காங்கிரஸ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளோம். தமிழக அரசு அதை நிறைவேற்றும் என நம்புகிறோம். இஸ்லாமிய சமுதாயத்தினா் அச்சப்படத்தேவையில்லையென தமிழக முதல்வா் திரும்பத் திரும்ப கூறினாலும் அதை உறுதிப்படுத்தும் வகையில் பேரவையில் தீா்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என்றாா்.

ADVERTISEMENT

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தேசியச் செயலா் ஹெச்.அப்துல் பாசித், மாநில துணைத் தலைவா் நிசாா் அஹமத், நிா்வாகிகள் இக்பால் அஹமத், அஜீஸ் அஹமத், பிலால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT