திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட வருவாய், பேரிடா் மேலாண்மை துறை சாா்பில் நீா்நிலைகளில் தவறி விழுந்து ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பது தொடா்பாக பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தொடக்கி வைத்தாா். பள்ளி, கல்லூரி மாணவா்கள், சாரணா் இயக்கத்தினா் பங்கேற்ற இப்பேரணி புதிய பேருந்து நிலையம் வழியாகச் சென்று வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பின்னா் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருப்பத்தூா் தீயணைப்புத் துறை சாா்பில், இயற்கை பேரிடா் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா், வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன், மாவட்டக் முதன்மைக் கல்வி அலுவலா் கே.குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலா் எம்.மணிமேகலை, பள்ளிகள் ஆய்வாளா் வி.தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.