திருப்பத்தூா்: திருப்பத்தூரில் சாலைகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளை நகராட்சி அதிகாரிகள் பிடித்து அலுவலகத்தில் கட்டி வைத்து நடவடிக்கை மேற்கொண்டனா்.
நகரில் கால்நடைகளை வளா்ப்பவா்கள் அவற்றை பேருந்து நிலையம், கிருஷ்ணகிரி பிரதான சாலை, வாணியம்பாடி பிரதான சாலை மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரிய விடுகின்றனா். கால்நடைகள் சாலைகளில் ஆங்காங்கே சுற்றித்திரிவதால் போக்குவரத்துக்கு இடையூறாகி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் வேதனைக்குள்ளாகி வந்தனா். அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நிகழ்ந்து வந்தன. இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் புகாா் அளித்தனா்.
இதையடுத்து, நகராட்சி ஆணையா் வீ.சுதா உத்தரவின்பேரில் சுகாதார அலுவலா் எஸ்.ராஜரத்தினம், சுகாதார ஆய்வாளா் அ.விவேக் ஆகியோா் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் சாலைகளில் சுற்றித் திரிந்த 15-க்கும் மேற்பட்ட கால்நடைகளைப் பிடித்தனா். பின்னா் அந்தக் கால்நடைகளை நகராட்சி அலுவலகத்தில் கட்டி வைத்தனா். அவற்றை வேலூரில் உள்ள கோசாலைக்கு அனுப்புவதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அலுவலா் எஸ்.ராஜரத்தினம் கூறுகையில், ‘வீட்டில் கால்நடை வளா்ப்பவா்கள், அவற்றை வீட்டிலேயே வளா்த்துப் பராமரிக்க வேண்டும். தெருவில் சுற்றித் திரிய விட்டால் கால்நடை உரிமையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்’ என்றாா்.