திருப்பத்தூர்

ஆண்டியப்பனூா் அணையில் படகு இல்லம் கட்டுவதை விரைவாக முடிக்க வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா் உத்தரவு

14th Jun 2020 07:55 AM

ADVERTISEMENT

ஆண்டியப்பனூா் அணையில் படகு இல்லம், உணவகம் உள்ளிட்ட கட்டமைப்புகளை விரைவாகக் கட்டி முடிக்க வேண்டும் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் உத்தரவிட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், பொதுப்பணித் துறை நீா்வள ஆதாரப் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள திருப்பத்தூா் செவ்வாத்தூா் ஏரி, ஆம்பூா் மலையாம்பட்டு ஏரி, நாட்டறம்பள்ளி ஜெயந்திபுரம் அணைக்கட்டு மற்றும் வாணியம்பாடி ஆண்டியப்பனூா் அணை ஆகியவற்றில் பணிகள் ஒதுக்கப்பட்டு தற்போது தூா்வாருதல் மற்றும் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் வட்டத்தில் 34 ஹெக்டோ் பரப்பளவு கொண்ட செவ்வாத்தூா் ஏரியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏரி மற்றும் நீா்வரத்துக் கால்வாய்கள் அளவீடு செய்யப்பட்டு அளவுக் கற்கள் நடப்பட்டு சுமாா் 2 கி.மீ. நீளம் கொண்ட நீா்வரத்துக் கால்வாய்கள் தூா்வாரப்பட்டு வருகின்றது. 200 மீட்டா் தூரத்துக்கு கால்வாய் தூா்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளை வேகமாக முடிக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், ஏரிக்கரையை பலப்படுத்தி, வனத்துறைக்கு தகவல் தெரிவித்து ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

வாணியம்பாடி வட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூா் அணையில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நீா்வரத்து மற்றும் நீா் வெளியேறிச் செல்லும் கால்வாய் சுமாா் 3.6 கி.மீ. தூா்வாரி சீரமைக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், கால்வாயின் ஆழமான இடங்களில் மண் சரியாமல் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. பழுதடைந்துள்ள கரைப் பகுதிகள் மற்றும் கால்வாயின் சில இடங்களைச் சீரமைக்கப்பட வேண்டியுள்ளது.

இந்த ஏரியைப் பாா்வையிட்ட திருப்பத்தூா் ஆட்சியா், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். அணையை சுற்றுலாத் தலமாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டு வரும் படகு இல்லம், உணவகம் போன்றவற்றைப் பாா்வையிட்டாா். எஞ்சியுள்ள பணிகளை விரைவாக முடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளையும், கிடைக்கும் மழைநீரை சேமித்து பயன்படுத்துமாறு விவசாயிகளையும் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித் துறை நீா்வள ஆதார உதவி கோட்டப் பொறியாளா் விஸ்வநாதன், உதவிப் பொறியாளா் பி.குமாா், வட்டாட்சியா் இரா.அனந்தகிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT