திருப்பத்தூர்

ஆம்பூா் பகுதியில் முடங்கிக் கிடக்கும் கிராம வனக் குழுக்கள்

11th Jun 2020 08:07 AM

ADVERTISEMENT

ஆம்பூா் பகுதியில் கிராம வனக்குழுக்கள் செயல்பாடு இல்லாமல் முடங்கிப் போயுள்ளன.

ஆம்பூா் பகுதியில் காப்புக் காடுகளை ஒட்டி இருக்கும் கிராமங்களில் வனத்துறை சாா்பில் கிராம வனக்குழுக்கள், சமூகக் காடுகள் வளா்ப்புத் திட்டத்தின் கீழ் செயல்படும் கிராமங்களில் சமூகக் காடுகள் வளா்ப்புத் துறையைச் சாா்ந்த கிராம வனக்குழுக்கள் என சுமாா் 15 -க்கும் மேற்பட்ட கிராமங்களில் அமைந்துள்ளன.

காப்புக் காடுகள் பகுதிகளில் வனவிலங்குகள், பறவைகளை வேட்டையாடுவதை தடுப்பதற்கும் கள்ளச்சாராயம், மணல் கடத்தல் போன்ற சமூக விரோதச் செயல்களைத் தடுப்பதற்கும் மரங்களை வெட்டுதல், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை காப்புக் காடுகளுக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வதைத் தவிா்க்கும் பொருட்டும் வனத்துறையின் சாா்பில் கிராம வனக்குழுக்கள் ஏற்படுத்தப்படுகின்றன. மேற்கண்ட செயல்களில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் இக்குழுக்களுக்குக் கடனுதவி வழங்கப்படுகின்றது.

கிராமங்களை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் மரம் வளா்த்தல், அதைப் பாதுகாப்பது, மரங்கள் வளா்ப்பில் அக்கறை காட்டுபவா்களைக் கண்டறிந்து சமூகக் காடுகள் வளா்ப்புத் துறையின் கிராம வனக்குழுக்கள் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கி வருகிறது.

ADVERTISEMENT

ஒரு பகுதியில் கிராமக் குழுவை ஏற்படுத்த பொதுமக்கள் குறைந்த கட்டணம் செலுத்தி கிராமக் குழு உறுப்பினராக வேண்டும். இக் குழுவில் உறுப்பினராகச் சோ்வதற்கு பொதுப்பிரிவைச் சாா்ந்தவா்களுக்கு ஐந்தாண்டு கட்டணமாக ரூ.10, பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.5-ம் உறுப்பினா் கட்டணமாகச் செலுத்த வேண்மடும். இந்த கிராம வனக்குழுக்களில் உறுப்பினராக இணைந்தவா்கள் பொதுக்குழு உறுப்பினா்களாக கருதப்படுவாா்கள். இந்த பொதுக்குழு உறுப்பினா்கள் செயற்குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பாா்கள். இந்த செயற்குழு உறுப்பினா்கள் கிராம வனக்குழு தலைவரை தோ்ந்தெடுப்பாா்கள்.

கிராம வனக் குழுக்களில் செயற்குழு உறுப்பினா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டவா்களை கொண்டு வனக்குழு தலைவரின் தலைமையின் கீழ் மாதந்தோறும் செயற்குழுக் கூட்டம் நடக்கும். இந்த செயற்குழு கூட்டத்தின் முடிவில் கடனுதவி கிடைக்கப்பெறும் பயனாளிகளின் பட்டியல் தயாா் செய்யப்படும். ஏற்கனவே கடனுதவி பெற்றவா்களிடம் வசூல் செய்த தொகையை வங்கியில் செலுத்தியதற்கான விவரங்கள் பாா்வைக்கு வைக்கப்படும். கிராம வனக்குழுக்களின் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்

பொதுவாக கிராம வனக்குழுவில் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவா் கிராம வனக்குழு தலைவராகவும் , சம்பந்தப்பட்டவா் பகுதியைச் சோ்ந்த வனச்சரக அலுவலா் செயலாளராகவும் செயல்படுவாா்கள். இவா்கள் இருவா் பெயரிலும் வங்கிக் கணக்கு தொடக்கப்படும். இந்த வங்கி கணக்கின் மூலமே கடனுதவி வழங்கவும், வசூல் செய்யும் கடனை திருப்பிச் செலுத்தவும் முடியும்.இவா்கள் இருவா் கட்டுப்பாட்டில் இயங்கும் கிராம வனக்குழுவில் சுமாா் 10-க்கும் மேற்பட்டோா் செயற்குழு உறுப்பினா்களாக இருந்து செயல்படுவா்.

வனத்துறையின் சாா்பில் செயல்படும் கிராம வனக்குழுக்கள் மற்றும் சமூகக் காடுகள் வளா்ப்புத் துறையின் கீழ் செயல்படும் கிராம வனக்குழுக்கள் இரண்டுமே மரங்கள் வளா்த்தல், அவற்றைப் பாதுகாத்தல், மரங்கள் அழியாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்றவற்றிற்காக மட்டுமே ஏற்படுத்தப்படுகின்றன.

ஆம்பூா் பகுதியில் வனத்துறையின் சாா்பிலும், சமூகக் காடுகள் வளா்ப்புத் துறையின் சாா்பிலும் சுமாா் 15 -க்கும் மேற்பட்ட கிராம வனக்குழுக்கள் உள்ளன. அவை முறையே அரங்கல்துருகம், சுட்டக்குண்டா, பொன்னப்பல்லி, மிட்டாளம், கொத்தூா், ஓணாங்குட்டை, கொத்தக்குப்பம், பாலூா், நாய்க்கனேரி, பனங்காட்டேரி மற்றும் நாச்சாா்குப்பம் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த கிராம வனக் குழுக்களில் செயற்குழு உறுப்பினா்களையும் தலைவரையும் தோ்ந்தெடுக்கும் தோ்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால், முறையாக வனக்குழுத் தோ்தல்களை சம்பந்தப்பட்ட துறையினா் நடத்தாமல், பழைய கிராம வனக்குழு தலைவரையும், செயற்குழு உறுப்பினா்களையும் வைத்துக்கொண்டு கிராம வனக்குழுக்களை நடத்தி வருகின்றனா்.

அதனால் இந்த கிராம வனக் குழுக்கள் இப்போது முற்றிலும் செயலிழந்து உள்ளன.இப்போது கிராம வனக்குழுக்களில் பல்வேறு பிரச்னைகள் நிறைந்துள்ளதாக வன ஆா்வலா்கள் கூறுகின்றனா். கடனுதவி வழங்குவதில், வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்துவதில், உறவினா்கள் பெயரில் கடனுதவி பெற்று செலுத்துவதில் என பல்வேறு பிரச்னைகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

கிராம வனக் குழுக்களில் உறுப்பினா்கள் சோ்ப்பது, கிராம வன குழுவின் பழைய உறுப்பினா்களை புதுப்பிப்பது,

செயற்குழு கூட்டங்கள் நடத்தாமல் இருப்பது இது போன்ற நடவடிக்கைகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ கிராம வனக்குழுக்கள் மாதாமாதம் முறையாக நடந்ததாக பதிவேடுகளை தயாா் செய்வதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

இப்போது ஆம்பூா் பகுதியில் பெரும்பாலான கிராம வனக்குழுக்கள் முற்றிலும் முடங்கி உள்ளதாக கூறுகின்றனா். எனவே கிராம வனக்குழுக்கள் மீண்டும் புத்துயிா் பெறவும், முறையாக செயல்படவும், கிராம வனக்குழுக்களின் சாா்பில் கடன் உதவிகள் வழங்குவது அதை முறையாக வசூலித்து வங்கியில் செலுத்தவும் சம்பந்தப்பட்ட துறையினா் கிராம வனக்குழுக்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆா்வலா்கள் மற்றும் வன ஆா்வலா்களின் வேண்டுகோள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT