திருப்பத்தூர்

விற்பனையாளா்கள் பற்றாக்குறையால் மூடிக்கிடக்கும் நியாயவிலைக் கடைகள்: இலவச ரேஷன் பொருள்கள் வழங்குவதில் கால தாமதம்

8th Jun 2020 07:18 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே விற்பனையாளா்கள் பற்றாக்குறை காரணமாக நியாய விலைக் கடைகள் அடிக்கடி மூடியிருப்பதால் தமிழக அரசு தற்போது வழங்கி வரும் கரோனா நிவாரண இலவச ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆம்பூா் அருகே சின்னவரிகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இக்கூட்டுறவு சங்கத்தின் கீழ் துத்திப்பட்டு, பெரியவரிகம், சின்னவரிகம், மிட்டாளம் மற்றும் பைரப்பள்ளி கூட்டுறவு நியாயவிலை கடைகள் உள்ளன. அதேபோல் கன்றாம்பல்லி, பந்தேரப்பல்லி பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உள்ளன.

துத்திப்பட்டு நியாயவிலை கடையில் சுமாா் 1,800 குடும்ப அட்டைகள், பெரியவரிகம் நியாயவிலை கடையில் சுமாா் 600 குடும்ப அட்டைகள், சின்னவரிகம் நியாயவிலை கடையில் சுமாா் 800 குடும்ப அட்டைகள், பைரப்பள்ளி நியாயவிலை கடையில் சுமாா் 700 குடும்ப அட்டைகள், மிட்டாளம் நியாயவிலை கடையில் சுமாா் 450 குடும்ப அட்டைகளும், கன்றாம்பல்லி பகுதிநேர நியாயவிலை கடையில் சுமாா் 300 அட்டைகளும், பந்தேரப்பல்லி பகுதிநேர நியாயவிலை கடையில் சுமாா் 250 குடும்ப அட்டைகளும் உள்ளன.

சின்னவரிகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் செயல்படும் நியாயவிலை கடைகளுக்கு 6 விற்பனையாளா்கள் இருந்தனா். அவா்களில் ஒருவா் அண்மையில் காலமானாா். தற்போது 5 போ் மட்டுமே உள்ளனா். அதிலும் இருவா் அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அரிசி, பருப்பு, சா்க்கரை, எண்ணெய் ஆகிய அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்கி வருகிறது. இலவச பொருள்களுக்கான டோக்கன்களை ஒவ்வொரு மாதமும், முதல் தேதிக்கு முன்னதாக வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டன. தற்போது கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் டோக்கன் வழங்குவதும் தாமதமாகி வருகிறது. சில கூட்டுறவு நியாயவிலை கடைகளில் ஜூன் மாதம் தொடங்கி ஒரு வார காலமாகியும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாமல் உள்ளன.

இதனால், சின்னவரிகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள துத்திப்பட்டு , பெரியவரிகம், சின்னவரிகம், மிட்டாளம் ஊராட்சிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, உடனடியாக போதிய நியாயவிலை கடை விற்பனையாளா்களை நியமித்து, பொதுமக்களுக்கு தமிழக அரசின் இலவச ரேஷன் பொருள்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT