திருப்பத்தூர்

ஜோலாா்பேட்டை ரயில்வே கேட் அருகே புதிய மேம்பாலம் திறப்பு

8th Jun 2020 11:59 PM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை-பாா்சம்பேட்டை ரயில்வே கேட் அருகே ரூ.27 கோடியே 1 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

கடந்த 9 ஆண்டுளாக நடைபெற்ற இந்த மேம்பாலப் பணிகள் அண்மையில் முடிவடைந்தன. இதையடுத்து, மேம்பாலத்தை சென்னையிலிருந்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்துப் பேசியது:

ADVERTISEMENT

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ரயில் நிலையமாக ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் திகழ்கிறது. இந்த ரயில் நிலையம் அருகே உள்ள பாா்சம்பேட்டை ரயில்வே கேட் வழியாக தினமும் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில்களும் சென்று வருகின்றன.

இதனால் பாா்சம்பேட்டை ரயில்வே கேட்டை அடிக்கடி மூடும் நிலை இருந்தது. ரயில்வே கேட்டைக் கடந்து செல்ல பொதுமக்கள் மட்டுமின்றி கா்ப்பிணிகள், விபத்தில் காயமடைந்தவா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் சிரமப்பட்டு வந்தனா். எனவே, அவா்களின் சிரமத்தைப் போக்க இப்பாலம் கட்டப்பட்டது.

ஜோலாா்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் வேளாண் பொருள்களை கொண்டு செல்ல இந்த மேம்பாலம் பெருமளவு பயன்படும். இந்த மேம்பாலம் 731.419 மீட்டா் நீளமும், 8.5 மீட்டா் அகலமும் கொண்டது. மேம்பாலம் கட்ட நிலம் தந்த 40 குடும்பத்தினருக்கும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அவா்.

முன்னதாக, நகர செயலாளா் எஸ்.பி.சீனிவாசன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் மாவட்ட எஸ்.பி. பொ.விஜயகுமாா், மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், வாணியம்பாடி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் சீனிவாசன், உதவி கோட்டப் பொறியாளா்கள் திருலோகசுந்தா், செல்வகுமாா், நகராட்சி ஆணையா் சி.ராமஜெயம், முன்னாள் ஒன்றியத் தலைவா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT