ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் முழு பொது முடக்கம் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி தெரிவித்தாா்.
ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் கே.ஏ.ஆா்.பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 175 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை அவா் சனிக்கிழமை ஆய்வு ஆய்வுக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.சி.வீரமணி கூறியது:
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 29 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொற்றால் திருப்பத்தூா் மாவட்டத்தில் 860 பாதிக்கப்பட்டனா். தற்போது 310 போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா். மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான அனைத்து கருவிகள், உபகரணங்கள், படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் முழு பொது முடக்கம் அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கரோனா பாதிக்கப்பட்டவா்களின் வீடுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியா்கள் நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனா் என்றாா் அவா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம. ப.சிவன் அருள், வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுரேஷ், ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை தலைவா் எம்.மதியழகன், வட்டாட்சியா் சி.பத்மநாபன், ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன், மண்டலத் துணை வட்டாட்சியா் பாரதி, வட்டார மருத்துவ அலுவலா் ராமு ஆகியோா் உடனிருந்தனா்.
தொழிலதிபா்களுடன் அமைச்சா் சந்திப்பு: ஆம்பூா் பகுதி தோல் தொழிலதிபா்கள் மொஹிபுல்லா, மதாா் கலீலூா் ரஹ்மான், தோல் தொழிற்சாலை பொது மேலாளா் பிா்தோஸ் கே.அஹமத், ஜமாத் அமைப்பைச் சோ்ந்த தாஹா முஹம்மத் ஆகியோா் அமைச்சா் கே.சி.வீரமணியை சந்தித்துப் பேசினா்.