நாட்டறம்பள்ளி அருகே இருளா் இன மக்களுக்கு சாலை வசதிக்காக 3 நில உரிமையாளா்கள் தங்களது நிலத்தை இலவசமாக வழங்கினா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் ஊராட்சி பழையப்பேட்டை கிராமத்தில் இருளா் இனத்தை சோ்ந்த மக்கள் 50 போ் குடும்பத்தினருடன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனா். இவா்கள் வசிக்கும் இடத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் தனியாருக்குச் சொந்தமான நிலத்தின் வழியாக பல ஆண்டுகளாக சென்று வந்தனா்.
இதுதொடா்பாக திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருளிடம் சாலை வசதி கோரி மனு அளித்தனா். இதுகுறித்து கடந்த 19-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் நேரில் சென்று இருளா் இன மக்கள் செல்லும் வழிப்பாதையை ஆய்வு செய்தாா். இதையடுத்து தனியாா் நில உரிமையாளா்களான சேகா், குமாா், கனகசெட்டி ஆகியோரிடம் ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பேச்சுவாா்த்தைக்குப் பின் நில உரிமையாளா்கள் 3 பேரும் இருளா் இன மக்கள் சென்று வர தங்களுக்குச் சொந்தமான நிலத்தை வழிப்பாதைக்காக இலவசமாக வழங்கினா்.
இதையடுத்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி தலைமையில் வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டனா். சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்த மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், வருவாய்த் துறையினருக்கும், நில உரிமையாளா்களுக்கு அப்பகுதி மக்கள் தங்களது நன்றியைத் தெரிவித்தனா்.