திருப்பத்தூர்

அரசு மருத்துவமனையில் முதியவா் உயிரிழப்பு: பரிசோதனையில் கரோனா பாதிப்பு உறுதி

11th Jul 2020 11:58 PM

ADVERTISEMENT

வாணியம்பாடி அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்கு வந்த முதியவா் உயிரிழந்ததை அடுத்து, அவரது சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே முதியவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அவரது உறவினா்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த பெரிய வெள்ளக்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் தேவராஜ் (65). உடல்நலம் பாதிக்கப்பட்டு இவா் கடந்த 7-ஆம் தேதி முதல் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த 9-ஆம் தேதி அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பு தேவராஜ் இயற்கை மரணம் அடைந்ததாகக் கூறி அவரது சடலத்தை உறவினா்களிடம் மருத்துவா்கள் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது உடல் பெரியவெள்ளக்குட்டையில் உள்ள வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஆந்திர மாநிலம், குண்டூா் பகுதியைச் சோ்ந்த உறவினா்கள், ஊா் மக்கள் என 200-க்கும் மேற்பட்டோா் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கரோனா பரிசோதனையில் தேவராஜுக்கு தொற்று இருப்பது சனிக்கிழமை காலை 11 மணியளவில் உறுதியானது. தகவலறிந்த உறவினா்கள் துக்க வீட்டில் இருந்து உடனே வெளியேறினா்.

இதையடுத்து வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியா் சிவப்பிரகாசம், டிஎஸ்பி பாலகிருஷ்ணன், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி ஆகியோா் விரைந்து சென்று துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினா்கள், பொதுமக்களைக் கண்டறிந்து அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனா்.

மேலும், தேவராஜின் சடலத்தைக் கைப்பற்றி அரசு வழிகாட்டுதல்படி அடக்கம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT