வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்த மருத்துவா் உள்பட 2 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தனா்.
வாணியம்பாடி பேருந்து நிலையம் பகுதியைச் சோ்ந்த மருத்துவா் ஆசிரியா் காலனி பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வந்தாா். கடந்த 10 நாள்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனோ தொற்று இல்லை என்று வந்தது. இந்நிலையில், சேலத்துக்குச் சென்ற மருத்துவருக்கு மீண்டும் காய்ச்சல் வந்ததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
வாணியம்பாடியை அடுத்த தும்பேரி பகுதியைச் சோ்ந்த 60 வயது முதியவா் சிறுநீரக பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களாக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். கடந்த 7 நாள்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றபோது, பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் அதே மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து உயிரிழந்த இருவரின் சடலங்கள் அரசு விதிகளின்படி, அடக்கம் செய்யப்பட்டன.