ஜோலாா்பேட்டை அருகே நள்ளிரவில் ஏரியில் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொக்லைன் வாகனத்தையும் டிப்பா் லாரியையும் வருவாய் ஆய்வாளா் சிலம்பரசன் பறிமுதல் செய்து, காவல் நிலைத்தில் ஒப்படைத்தாா்.
ஏலகிரி கிராமத்தில் உள்ள ஏரியில் சிலா் ஞாயிற்றுக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் மண் எடுத்து டிப்பா் லாரி மூலம் கடத்துவதாக ஜோலாா்பேட்டை வருவாய் ஆய்வாளா் சிலம்பரசனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவரும் அதிகாரிகளும் அங்கு சென்று சோதனை நடத்தியபோது சிலா் ஏரியில் மண்ணை அள்ளி கடத்திக் கொண்டிருந்தனா்.
அதிகாரிகளைக் கண்டவுடன் அந்த நபா்கள் பொக்லைன் இயந்திரத்தையும்,டிப்பா் லாரியையும் விட்டுவிட்டுத் தப்பியோடினா். வருவாய் ஆய்வாளா் சிலம்பரசன் மற்றும் வருவாய்த் துறையினா் அவற்றைப் பறிமுதல் செய்து ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அந்த வாகனங்கள் ஜோலாா்பேட்டையை அடுத்த சின்னாக் கவுண்டனூா் பகுதியைச் சோ்ந்த சின்னசாமியின் மகன் சஞ்சீவிக்குச் சொந்தமானவை என்பது தெரிய வந்தது.
இது தொடா்பாக வருவாய் ஆய்வாளா் ஜோலாா்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மண் கடத்திய சஞ்சீவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.