வாணியம்பாடி அருகே சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்ற பேருந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் வாணியம்பாடி வட்டத்திற்குட்பட்ட நாராயணபுரம் ஊராட்சிப் பகுதி, ஜவ்வாது ராமசமுத்திரம் மற்றும் ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். மனுவின் விபரம்:
எங்கள் பகுதியில் 3 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இங்கு நாராயணபுரம் கிராமம் வரை மட்டுமே பேருந்துகள் வந்து செல்கின்றன. அந்த கிராமத்தின் ஆரம்பத்திலிருந்து மாரியம்மன் கோயில் முடியும் வரை இருபுறமும் சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இதனால் அரசுப் பேருந்துகள், பள்ளி வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடிவதில்லை.
அரசு இதை ஆய்வு செய்து, ஜவ்வாது ராமசமுத்திரம் மற்றும் லட்சுமிபுரம் கிராம மக்களுக்கு வசதியாக பேருந்துகளும் பள்ளி வாகனங்களும் சென்று வர வழிவகை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.