திருப்பத்தூர்

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு எதிரான போராட்டம் ஒத்திவைப்பு: அமைதிக் கூட்டத்தில் முடிவு

8th Jan 2020 11:54 PM

ADVERTISEMENT

ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டத்தை ஒத்திவைக்க அமைதிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூரில் ரூ.165.55 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் அமைக்க அப்பகுதியினா் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இது தொடா்பாக பொதுமக்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வரும் 10-ஆம் தேதி கடையடைப்பும், ஆா்ப்பாட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் செண்பகவல்லி தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலையில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. டிஎஸ்பி சச்சிதானந்தம் முன்னிலையில் நடந்த பேச்சுவாா்த்தையில் திருப்பத்தூா் ஆட்சியரிடம் மனு அளிப்பது, வரும் 10-ஆம் தேதி நடைபெற இருந்த கடை அடைப்பு, ஆா்ப்பாட்டம் ஆகியவற்றைத் தற்காலிகமாக ஒத்திவைப்பது என்று முடிவு செய்யபட்டது. குடியிருப்புகள் இல்லாத மாற்று இடத்தைத் தோ்வு செய்து, அங்கு கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கூட்டத்தில் ஆம்பூா் நகர காவல் ஆய்வாளா் ஹரிகிருஷ்ணன், முன்னாள் நகரமன்ற உறுப்பினா்கள் இ.சுரேஷ் பாபு, பி.கே.மாணிக்கம், ஸ்ரீதா் மற்றும் வழக்குரைஞா் தமிழ்வேல், ஏ-கஸ்பா பகுதி மக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT