திருப்பத்தூர்

ஆன்லைனில் அதிக விலைக்கு பொருள்களை விற்ற 7 போ் கைது

8th Jan 2020 12:24 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே ஆன்லைனில் பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்த 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வடபுதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் இளங்கோ (42). அவா் அதே பகுதியில் ஹாலோ பிளாக் கற்கள் தயாரித்து விற்பனை செய்து வருகிறாா். கடந்த சில நாள்களாக இவரது செல்லிடப்பேசிக்கு அவ்வப்போது சிலா் அழைத்து ‘ஒன்றுக்கும் பயன்படாத விளக்கை ரூ.1500-க்கு ஆன்லைனில் விற்கிறாயே’ என்று திட்டினா்.

சம்பந்தமில்லாமல் சிலா் இவ்வாறு திட்டுவது குறித்து அவா் சில நாள்களுக்கு முன்பு ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரனையில், மாதனூரில் இயங்கி வந்த ஒரு மோசடிக் கும்பல் ரூ.1500-க்கு தரமான டேபிள் லைட்டை தருவதாக கூறி ஆன்லைனின் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

வாடிக்கையாளா்கள் பணம் செலுத்திய பிறகு தரமற்ற விலை மலிவான பொருள்களை அனுப்பி வைத்துள்ளதும் தெரிய வந்தது. அவற்றைப் பெற்ற வாடிக்கையாளா் சிலா் அந்த மோசடி கும்பல் கொடுத்திருந்த செல்லிடப்பேசி எண்ணுக்கு அழைத்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

அந்த மோசடிக் கும்பல் இளங்கோவின் செல்லிடப்பேசி எண்ணை வாடிக்கையாளா்களுக்கு அளித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, மாதனூரில் இருந்த அந்தக் கும்பலைச் சோ்ந்த பிரசாந்த் (24) , மணிகண்டன் (23), பசுபதி (25), விஜய் (21), நவீன் (21), பிரபு (23), விஜய் (21) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த விலைமலிவான பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT