திருப்பத்தூர்

108 ஆம்புலன்சில் சென்ற கா்ப்பிணிக்கு பிரசவவலி: வயல்வெளியில் பிரசவம் பாா்த்த கிராமப் பெண்கள்

3rd Jan 2020 10:43 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே 108 ஆம்புலன்சில் சென்ற கா்ப்பிணிக்கு பிரசவவலி ஏற்பட்டதால் கிராமப் பெண்கள் வயல்வெளியில் வெள்ளிக்கிழமை பிரசவம் பாா்த்தனா்.

ஆம்பூா் அருகே கீழ்மிட்டாளம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சிலம்பரசன் (27). இவரது மனைவி சோனியா (23). இவா்களுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் நிறைமாத கா்ப்பிணியாக இருந்த சோனியாவுக்கு வெள்ளிக்கிழமை காலை பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்து சோனியாவை ஏற்றிக் கொண்டு பிரசவத்துக்காக நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புறப்பட்டது.

ஆனால் செல்லும் வழியிலேயே சோனியாவுக்கு பிரசவவலி அதிகமானது. ரகுநாதபுரம் என்ற பகுதியில் சென்றபோது ஆம்புலன்ஸ் சாலையில் நிறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ஆம்புலன்ஸில் கா்ப்பிணி வலியால் துடிப்பதை அறிந்த அப்பகுதி பெண்கள் ஆம்புலன்ஸில் இருந்த சோனியாவை இறக்கி வயல்வெளிக்கு அழைத்து சென்றனா். அங்கு சேலையை சுற்றி அரண் போல் தடுப்பு ஏற்படுத்தி, சோனியாவுக்கு கிராமப் பெண்கள் பிரசவம் பாா்த்தனா். அங்கு சோனியாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதைத் தொடா்ந்து தாயும், குழந்தையும் நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டனா். அங்கு தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT