திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை தாரா்களுக்கு ரூபாய் ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியா் திரு.ம.ப.சிவன் அருள் தலைமையில் நடைப்பெற்றது.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் எதிா் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் பேசியது:தமிழக முதலமைச்சா் எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடவேண்டும் எனும் அடிப்படையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் ரொக்கம் ரூபாய் ஆயிரத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட ஆணையிட்டு அவற்றை சென்னை தலைமை செயலகத்தில் நவம்பா் 29-ஆம் தேதி துவக்கி வைத்தாா்.
அதனடிப்படையில் வருகின்ற 5-ஆம் தேதியன்று திருப்பத்தூா் மாவட்டத்தில் மாநில பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சா் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா் கபில் ஆகியோரால் இந்த திட்டம் துவக்கி வைக்கப்படவுள்ளது.திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 547 ரேஷன் கடைகளிலும் 3 லட்சத்து 10 ஆயிரத்து 564 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்ப்படவுள்ளது.குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படவேண்டிய ரொக்க பணம் மற்றும் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் கரும்பு போன்ற அனைத்தும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
இந்த பொருட்களை விரைவாக வரவழைத்து தேவையான எடையில் வழங்கிடவும்,பேக் செய்யும் பொருட்களின் தரத்தினை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட அலுவலா்களுக்கு உத்திரவிட்டாா். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க.ராஜ்குமாா், மாவட்ட வழங்கல் அலுவலா்(பொறுப்பு)இரா. வில்சன்ராஜசேகா், இணைப்பதிவாளா் ராஜலட்சுமி, துணை பதிவாளா்கள் முனிராஜ், முரளிகண்ணன், வசந்தலட்சுமி உள்பட அனைத்து வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், கூட்டுறவு பொதுவிநியோக அலுவலா்கள் பங்கேற்றனா்.