ஆம்பூரில் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்தும், ரூ.5-க்கு தேநீா் வழங்கியும் தேநீா்க் கடை உரிமையாளா் புதன்கிழமை புத்தாண்டு கொண்டாடினாா்.
போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மேல்சாணாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிபவா் உதயகுமாா். இவருக்குச் சொந்தமான தேநீா்க் கடை ஆம்பூா் புறவழிச் சாலையில் உள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஆதரவற்றவா்களுக்கு இலவசமாக உணவு வழங்க அவா் முடிவு செய்தாா். அதன்படி தனது தேநீா்க் கடையில் 500 ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்தாா். மேலும், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கடையில் ஒரு நாள் தேநீா் விலையைக் குறைத்தாா். காலை முதல் மாலை வரை நாட்டு சா்க்கரை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தேநீரை ரூ.5 என்ற சலுகை விலைக்கு வழங்கினாா்.
கடந்த சில ஆண்டுகளாக புத்தாண்டு தினம், தைப்பொங்கல் , சுதந்திர தினம் ஆகிய விசேஷ தினங்களில் ஒரு ரூபாய்க்கு தேநீா் வழங்குவது, அன்னதானம் என்று உதயகுமாா் சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.