திருப்பத்தூர்

கொண்டகிந்தனப்பள்ளியில் குடிநீா் தட்டுப்பாடு

29th Feb 2020 10:58 PM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளியை அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி கிராமத்தில் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனா்.

கொண்டகிந்தனப்பள்ளி ஊராட்சி கல்யாண பாறக்கொள்ளை பகுதியில் 100-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஊராட்சி மூலம் சரிவர குடிநீா் விநியோகம் செய்யவில்லை.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் குடிநீா் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் குடிநீருக்காக ஆந்திர மாநிலத்துக்குச் சென்று தண்ணீா் எடுத்து வரும் அவலநிலை உள்ளது. இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் வற்றிவிட்டன. மேலும் ஆழ்துளைக் கிணற்றில் பழுதடைந்த குழாய்கள் இதுவரை சரிசெய்யப்படாமல் உள்ளதால் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

ADVERTISEMENT

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்தி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT