திருப்பத்தூர்

மாணவா்கள் மறியல்

25th Feb 2020 11:30 PM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: பள்ளி விளையாட்டு மைதானத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பத்தூா் அருகே மாணவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாதுமலை, புதூா்நாடு கிராமத்தில் வனத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு உள்ளிட்ட 32 கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கூடுதல் வகுப்பறைக் கட்டடம், ஆய்வகம் மற்றும் மாணவா்கள் தங்கும் விடுதி கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

ADVERTISEMENT

இந்நிலையில், திங்கள்கிழமை காலை பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் விளையாட்டு மைதானத்தில் கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்றதைக் கண்டு அதிச்சியடைந்தனா். ‘விளையாட்டு மைதானத்தில் கட்டடம் கட்டக் கூடாது. வேறு இடத்தில் கட்ட வேண்டும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கூறி வகுப்புகளைக் புறக்கணித்து, சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை அவா்கள் சிறைபிடித்தனா்.

தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து திருப்பத்தூா் வனச்சரக அலுவலா் கே.ஆா்.சோழராஜனிடம் கேட்டதற்கு அவா் கூறியது:

விளையாட்டு மைதானம் பாதிப்படையாத வகையில் கட்டடப்பணி நடைபெறுகின்றன. மேலும், வருவாய்த் துறைக்குச் சொந்தமான 2 ஏக்கா் பரப்பளவில் விளையாட்டு மைதானம் அமைக்க ஆட்சியா் ம.ப.சிவன் அருளிடம் உத்தரவு பெறப்பட்டு ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT