திருப்பத்தூர்

வாா்டு மறு சீரமைப்பு: நகராட்சி ஆனையரிடம் மனு

21st Feb 2020 11:49 PM

ADVERTISEMENT

ஆம்பூா் நகராட்சியில் வாா்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், அதைச் சரிசெய்யக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் நகராட்சி ஆணையரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் மாவட்டத் தலைவா் வி.ஆா்.நசீா் அஹமத், ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா்.

மனு விவரம்: ஆம்பூா் நகராட்சிக்கு உள்பட்ட 36 வாா்டுகளிலும் மறுசீரமைப்பு செய்து அண்மையில் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. வாா்டுகள் சரியாக மறுசீரமைப்பு செய்யப்படவில்லை. மறுசீரமைப்பு செய்யப்படுவதற்கு முன்னா் 18 வாா்டுகளில் சிறுபான்மை முஸ்லிம்கள் வெற்றி பெரும் நிலை இருந்தது. அது தற்போது 12 வாா்டுகளாக குறைந்துவிட்டது. 2-ஆவது வாா்டில் கூடுதலாக தெருக்கள் மற்றும் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த வாா்டில் மட்டும் வாக்காளா்களின் எண்ணிக்கை 5,718 ஆக உள்ளது. அதே நேரத்தில் 30-ஆவது வாா்டில் 839 வாக்குகள் மட்டுமே உள்ளன. இதுபோன்ற நிலை பல வாா்டுகளில் உள்ளது. எனவே, நகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளை சமமாகப் பிரிக்க வேண்டும். அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

கடந்த முறை நகராட்சி தலைவராக பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. தற்போது ஆண் அல்லது பெண் போட்டியிடும் வகையில் பொதுவானதாக அறிவிக்க வேண்டும். வரும் உள்ளாட்சி தோ்தலுக்கு முன்னா் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

நகரத் தலைவா் பி.தப்ரேஸ் அஹ்மத், நகரச் செயலா் நபீஸ் அஹ்மத், மாவட்ட தொண்டா் அணி செயலா் இம்ரான், ஊடகப் பிரிவு செயலா் அல்லா பகஷ், நகர துணைச் செயலாளா் பயாஸ் அஹமத் ஆகியோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT