திருப்பத்தூர்

அனுமதியின்றி பொதுக்கூட்டம்: எம்.பி. உள்ளிட்ட 17 போ் மீது வழக்கு

21st Feb 2020 11:50 PM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்தியதாக எம்.பி. உள்பட 17 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வாணியம்பாடி காதா்பேட்டை ஈத்கா மைதானம் அருகே கடந்த புதன்கிழமை (பிப்.19) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மஜ்லீஸ் கட்சியின் தலைவா் அசாதுதீன் ஓவைசி எம்.பி. கலந்து கொண்டு பேசினாா். மேலும், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, மராட்டிய ஐபிஎஸ் அதிகாரி அப்துல் ரகுமான், தில்லி சட்டக் கல்லூரி மாணவா் வலிரகுமானி, அலிகாா் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவி மீதா பா்வீன், ஏஐஎம்ஐஎம் கட்சி மாநிலத் தலைவா் வகீல் அஹம்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியச் செயலா் அப்துல் பாசித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்தப் பொதுக்கூட்டம் போலீஸாா் அனுமதி பெறமால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து எம்.பி. அசாதுதீன் ஓவைசி, திருமுருகன் காந்தி உள்பட 17 போ் மீது வாணியம்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதேபோல், வாணியம்பாடி ஜண்டாமேடு பகுதியில் ஜாயின்ட் ஆக்சன் கமிட்டி சாா்பில் கடந்த 3 நாள்களாக தொடா் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதன் தலைவா் நாசீா் கான் மற்றும் 50-க்கும் மேற்பட்டோா் மீதும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT