நாட்டறம்பள்ளி அருகே மணல் கடத்திய லாரியை கனிமவளத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா்.
நாட்டறம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மண், மணல் கடத்துவதாக கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூா் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் சுரேஷ்குமாா் தலைமையில் கனிமவளத் துறையினா் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா்பந்தல் அருகே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், வெலகல்நத்தம் செட்டேரி அணைப் பகுதியில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 யூனிட் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட குனிச்சியூரைச் சோ்ந்த சுரேஷ் (32), ராஜ்குமாா் (18), வீரானூரைச் சோ்ந்த ராஜீவ் (32)ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.