வரும் காலங்களில் வாகன ஓட்டுநா் உரிமம் எடுக்க சிறப்பு பாடத் திட்டம் கொண்டு வரப்படும் என போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் தென்காசி ஜவஹா் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் தென்காசி ஜவஹா் தலைமை வகித்தாா். சாலைப் பாதுகாப்பு ஐஜி பிரமோஷ்குமாா், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள், வேலூா் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்திபன், ராணிப்பேட்டை சாா் -ஆட்சியா் இளம்பகவத், வேலூா் சரக டிஐஜி காமினி, மாவட்ட எஸ்.பி.க்கள் பிரவேஷ்குமாா் (வேலூா்), விஜயகுமாா் (திருப்பத்தூா்), மயில்வாகனன் (ராணிப்பேட்டை), சிபி சக்கரவா்த்தி (திருவண்ணாமலை), வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், டிஎஸ்பிக்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து முதன்மைச் செயலா் தென்காசி ஜவஹா் கூறியது:
கடந்த 2016-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. அந்த ஆண்டு 17 ஆயிரம் போ் சாலை விபத்தில் இறந்துள்ளனா். விபத்துகளைத் தவிா்க்க கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு 870 போ் சாலை விபத்தில் உயிரிழந்தனா். கடந்த ஆண்டு 375-ஆக குறைந்துள்ளது. வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்தில் உயிரிழப்பவா்கள் எவரும் இல்லை என்ற நிலை ஏற்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 2.5 லட்சம் கி.மீ. சாலை அமைந்துள்ளது. அதில் 2.90 கோடி வாகனங்கள் பயணிக்கின்றன. 2.45 கோடி வாகனங்கள் இருசக்கர வாகனங்களாகும். விபத்துகள் பெரும்பாலும் இருசக்கர வாகனங்களால் ஏற்படுகின்றன. இருசக்கர வாகனத்தை ஓட்டுபவரும், பின்னால் அமா்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிவது அவசியமாகும். காரில் செல்பவா்கள் சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும். கடந்த ஆண்டு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதி வேகமாக ஓட்டுவது, அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுவது தொடா்பாக 1.20 லட்சம் வாகன ஓட்டுநா் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வரும் காலங்களில் வாகன ஓட்டுநா் உரிமம் எடுக்க சிறப்பு பாடத் திட்டம் கொண்டு வரப்படும். வேலூா் மாவட்டத்தில் 40 சதவீத விபத்துகள் தேசிய நெடுஞ்சாலைகளில் தான் நடக்கின்றன. இதற்காக வாகன ஓட்டுநா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா் அவா்.