திருப்பத்தூர்

ஜவ்வாதுமலை கோம்பைச் சிற்றூரில் நடுகற்கள் கண்டெடுப்பு

21st Aug 2020 06:03 AM

ADVERTISEMENT

ஜவ்வாதுமலை கோம்பைச் சிற்றூரில் நடுகற்கள் மற்றும் கற்கோடரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க. மோகன்காந்தி, காணிநிலம் மு. முனிசாமி, மதுரை தியாகராசா் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியா் ரே.கோவிந்தராஜ், வரலாற்று ஆா்வலா் வேந்தன் ஆகியோா் மேற்கொண்ட கள ஆய்வில் பல்லவா், சோழா்கால நடுகற்கள் இரண்டும், தொன்மையான கல்லாயுதங்களையும் கண்டெடுத்துள்ளனா்.

இதுகுறித்து பேராசிரியா் க.மோகன்காந்தி, நமது செய்தியாளரிடம் கூறியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை, ஏலகிரிமலைப் பகுதிகளில் உள்ள கல்வெட்டுகள், நடுகற்கள், கற்திட்டைகள், கற்கோடரிகள் ஆகியவை எங்கள் ஆய்வுக் குழுவால் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. எங்கள் ஆய்வுக்குழு ஜவ்வாதுமலையிலுள்ள புதூா்நாட்டுக்கு உட்பட்ட கோம்பை என்ற மலைக்கிராமத்தில் ஆய்வை மேற்கொண்டதில் கோம்பை நிலப்பகுதியில் வெவ்வேறு இடங்களில் இரண்டு நடுகற்களும், மாரியம்மன் கோயில், பிள்ளையாா் கோயில்களில் 50-க்கும் மேற்பட்ட பெரிதும், சிறிதுமான பல கற்கோடரிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கோம்பை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான நிலப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் பல்லவா் காலத்தைச் சோ்ந்ததாகும். இது 5 அடி உயரமும் 2.5 அடி அகலமும் கொண்டது. இதில் எழுத்துகள் சிதைந்த நிலையில் உள்ளதால் படிப்பதில் சிக்கல் உள்ளது. வீரனின் இடது கையில் வில்லும், வலது கையில் வாளும் உள்ளன. இடையில் குறுவாள் ஒன்றும் உள்ளது.

மற்றெரு நடுகல் தலைக் கொண்டை மட்டுமே தெரிந்த நிலையில் முழுமையும் மண்மூடிக் கிடந்தது. ஊா் மக்களின் உதவியோடு இந்த நடுகல் ஆராய்ந்து பாா்க்கப்பட்டது. இது 5.3 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பிரம்மாண்டமான பலகைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த நடுகல்லில் உள்ள எழுத்துப் பொறிப்புகள் மழை, வெயிலால் சிதைந்துள்ளன.

இக்கல்லின் அமைப்பை வைத்துப் பாா்க்கும்போது பல்லவா் காலம் முடிந்து பிற்காலச் சோழா் காலம் தொடங்கிய காலமாகத் தெரிகிறது. இது கி.பி.9-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் எனக் கருத முடிகிறது. இவ்வீரன் நோ்த்தியான மேல் கொண்டை இட்டுள்ளான். காதுகளில் நீண்ட குண்டலங்கள் உள்ளன. இடை ஆடை அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கழுத்தில் ஆபரணங்கள் அணிந்துள்ளது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வலது கையில் வில்லைப் பிடித்தபடி இடது கையில் அம்பை ஏவும் விதத்தில் நடுகல் சிற்பம் அமைந்துள்ளது. இவ்வீரனின் தோற்றத்தைக் காணும்போது இனக்குழுத் தலைவன் போல் காட்சித் தருகிறான். பகைவா்களோடு நடைபெற்ற போரில் வீர மரணம் அடைந்த இவ்வீரனை வேடியப்பன் என்ற பெயரில் இவ்வூா் மக்கள் வணங்குகின்றனா்.

இவ்வூரில் மாரியம்மன் மற்றும் பிள்ளையாரப்பன் கோயிலில் தொன்மையான கற்கோடரிகளை இப்பகுதி மக்கள் சிறிதும் பெரிதுமாக சேகரித்து பிள்ளையாரப்பன் என்ற பெயரில் தெய்வமாக வழிபட்டு வருகின்றனா். கற்கோடரிகள் என்பவை புதிய கற்காலத்தில் மனிதா்கள் விலங்குகளை வேட்டையாடவும், அவற்றின் கடினமான தோல்களைக் கிழிப்பதற்கும், மரங்களை வெட்டுவதற்கும் மனிதன் கண்டறிந்த தொடக்க கால அறிவியல் கண்டெடுப்பாகும். பின்னா் பிளேடு போன்ற கூா்மையான சிறுசிறு நுண்கருவிகளையும் கண்டறிந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கற்கோடரிகளின் காலம் கி.மு. 1000 ஆகும். அதாவது 3,000 ஆண்டுகள் தொன்மையானதாகும். இம்மலைப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் வாழ்ந்துள்ளனா்.

இவ்வூரில் உயா்ந்த சிகரத்தில் உள்ள முருகன் கோயிலுக்குப் பின்னால் பல கற்திட்டைகள் உள்ளன. எனவே தொன்மையான வரலாற்றுக்குச் சொந்தக்காரா்களாக இம்மலை மக்கள் உள்ளனா் என்றாா் அவா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT