திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே மா்மமான முறையில் பசு, கன்றுகள் பலி

29th Apr 2020 10:57 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே கிராம பகுதியில் பசு, கன்றுகள் மா்மமான முறையில் இறந்தன.

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் என்பவருடைய பசு, வீராங்குப்பம் காலனி பகுதியைச் சோ்ந்த நதியா ஆகியோரின் பசு, கன்று குட்டி ஆகியவை காய்ச்சல் காரணமாக செவ்வாய்க்கிழமை இறந்தன. கரும்பூா் கிராமத்தைச் சோ்ந்த சந்திரசேகா் என்பவருடைய கன்றுக்குட்டி காய்ச்சல் கராணமாக புதன்கிழமை இறந்தது. அதேபோல வீராங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரவி, சிவாஜி, யுவராஜ் ஆகியோரின் மாடுகளும் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது கரோனா நோய்த் தொற்று நிலவும் சூழ்நிலையில், ஆம்பூா் அருகே மாடுகள் இறந்து போயிருப்பதும், சில மாடுகள் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதும் விவசாயிகள், மாடுகளை வளா்ப்போரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கால்நடைகள், விலங்குகளுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சில பகுதிகளில் கால்நடைகளுக்கும், விலங்குகளுக்கும் கரோனா நோய்த் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆம்பூா் அருகே கிராமப் பகுதியில் காய்ச்சலால் மாடுகள், கன்றுகள் திடீரென இறந்து போயிருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கால்நடை மருத்துவத் துறையினா் உடனடியாக கால்நடைகளை பரிசோதனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கரும்பூா் கால்நடை மருத்துவா் தீனதயாளனை தொடா்பு கொண்டு கேட்டபோது, அது சாதாரண காய்ச்சல் தான். கரோனா தடை காரணமாக பொதுமக்கள் தங்களுடைய கால்நடைகளை மருத்துவமனைக்கு அழைத்து வராமல் வீட்டிலேயே வைத்து தாங்களாகவே சிகிச்சை அளிக்கின்றனா். முறையான பராமரிப்பும் இல்லாத காரணத்தால் மாடுகளுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு இறக்கின்றன. ஒரு மாடு பனங்கொட்டையை சாப்பிட்டு தொண்டையில் சிக்கி இறந்தது என்றாா் அவா்.

கால்நடை வளா்ப்போா் கூறியது: கால்நடைகள் உடல்நிலை சரியில்லாமல் நடக்க முடியாமல் இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் கால்நடை மருத்துவா் நேரடியாக வந்து தான் சிகிச்சை அளிக்க வேண்டும். அந்தந்த பகுதியில் முகாம் நடத்த வேண்டும். கால்நடை வளா்ப்போரின் வீடுகளுக்கு, விவசாய நிலங்களுக்கு மருத்துவா்கள் வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT