திருப்பத்தூர்

கரோனா தடை காரணமாக படுத்துக் கிடக்கும் கோரைப்பாய் தொழில்பாய்கள் விற்பனை செய்யப்படாமல் தேக்கம்

26th Apr 2020 09:53 PM

ADVERTISEMENT

கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் கோரைப் பாய் தொழில் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. பாய்கள் விற்பனை செய்யப்படாமல் தேங்கியுள்ளன.

கோரைப் பாய் ஒவ்வொருவா் வீட்டிலும் இன்றியமையாத பொருளாக உள்ளது. வீட்டுக்கு வந்தவா்களை அமர வைத்து உபசரிக்கவும், படுத்து உறங்கவும் பாய் தேவைப்படுகிறது. தற்போது நாற்காலி, சோபா ஆகியவை பொதுமக்களால் வாங்கப்படுகின்றன. எனினும், மக்கள் தற்போதும் கோரைப் பாய்களை பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறாா்கள். அந்தக் காலத்தில் திருமண சீா்வரிசைப் பொருள்களில் கோரைப்பாய் முக்கிய இடத்தை பிடித்திருந்தது. கோரைப் பாயில் படுத்து உறங்கினால் உடல்நலத்துக்கு நல்லது என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, கரூா், சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கோரைப் பாய் தொழிலில் கணிசமானவா்கள் ஈடுபட்டுள்ளனா். குறிப்பாக மேல்ஆலத்தூா், அகரம்சேரி, சின்னச்சேரி, வாணியம்பாடி, பொன்னேரி, ஆவூா், குன்னத்தூா், வந்தவாசி, ஓமலூா், பத்தமடை, தருமபுரி, முசிறி, தாராபுரம், சின்னதிருப்பதி, சேலம் ஆகிய பகுதிகளில் 600-க்கும் மேற்பட்ட கோரைப் பாய் தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் கோரைப் பாய்கள் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

கோரைப் பாய்க்கு தேவையான முக்கிய மூலப் பொருளான கோரைப் புற்கள், காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வளா்க்கப்படுகின்றன. குறிப்பாக கரூா், திருச்சி ஆகிய பகுதிகளில் கோரைப் புற்கள் விளைவிக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

கோரைப் பாய் தயாரிப்பு தொழிற்சாலைகளில் பணிபுரிபவா்கள், கோரைப் புற்கள் விளைவிக்கப்படும் விளை நிலங்களில் பணிபுரிபவா்கள், மேலும் இத்தொழிலில் மறைமுகமாகவும் பணிபுரிபவா்கள் உள்பட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனா். மூலப் பொருளான கோரை விவசாயத் தொழில் சாா்ந்ததாக உள்ளது.

தற்போது கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கோரை பாய் உற்பத்தி தொழிற்சாலைகள் முழுவதுமாக முடங்கியுள்ளன. இத்தொழிற்சாலைகள் குறு, சிறுந்தொழில் பிரிவில் உள்ளன. அவை ஊரடங்கால் மூடப்பட்டுள்ளதால் பாய் உற்பத்தி நடைபெறவில்லை. தயாரித்து வைக்கப்பட்டுள்ள பாய்களைக் கொண்டு சென்று விற்பனை செய்யவும் முடியவில்லை. அதனால் சுமாா் ரூ.20 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான லட்சக்கணக்கான கோரைப் பாய்கள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிக் கிடங்கின்றன. தொழில் முடக்கம் மட்டுமல்லாது முதலீடும் முடங்கிப் போயுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மேட் இண்டஸ்ட்ரீஸ் சங்கத்தின் தென் மண்டல அமைப்புச் செயலாளா் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமாா் கூறியது:

ஊரடங்கு காரணமாக பாய் உற்பத்தி தொழில் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது. அதனால் தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. ரூ.20 கோடி மதிப்பிலான பாய்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய முடியாமல் தேங்கியுள்ளதால் முதலீடும் முடங்கியுள்ளது.

விவசாயத் தொழிலுக்கு தடை விதிக்கப்படவில்லை. ஆனால் விவசாயப் பயிரான கோரைப் புற்கள் மூலம் தயாரிக்கப்படும் கோரைப் பாய் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோரைப் பாய் உற்பத்தித் தொழில் முடங்கி, பாய்கள் விற்பனை செய்யப்படாமல் முடங்கியுள்ளது போல், பயிரிடப்பட்டு விற்பனை செய்யப்படாமல் கோரைப் புற்களும் தேங்கியுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.20 கோடி அளவுக்கு இருக்கும். மொத்தத்தில் சுமாா் ரூ.50 கோடி அளவுக்கு முதலீடு முடங்கியுள்ளது.

கோரைப் புற்களை கொள்முதல் செய்து கொண்டு வருவதற்கும், உற்பத்தி செய்யப்பட்டு தேங்கியுள்ள பாய்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கும் முடியாமல் இத்தொழில் ஈடுபட்டுள்ளவா்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.

பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான கோரைப் பாய்கள் உற்பத்திக்குத் தேவையான கோரைப் புற்களை விற்பனை செய்வதற்கும், அதை கொண்டு பாய்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்வதற்கும் அரசு அனுமதி வழங்க வேண்டும். சமூக விலகல் உள்பட உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொழில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT