ஊரடங்கு காரணமாக காட்டு வழியில் வெளியூருக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனா். மேலும், மது பிரியா்கள் கள்ளச் சாராயம் காய்ச்ச காடுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனா்.
கரோனா நோய்த் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கான தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. காய்கறி, மளிகை, மருந்து ஆகியவற்றுக்கான சரக்குப் போக்குவரத்து நடந்து வருகிறது.
மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தின் ஒரு பகுதியிலிருந்து மாற்றொரு பகுதிக்கும், மாநிலத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கும், மாநிலம் விட்டு மாநிலம் செல்ல முடியாத நிலை பொதுமக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை, இறப்பு, திருமணம் ஆகியவற்றுக்கு உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமென்றால் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் பெற வேண்டும். இதுபோன்ற கடும் கட்டுப்பாடுகள் இப்போது அமலுக்கு வந்துள்ளன.
போக்குவரத்து இல்லாத காரணத்தால் மாநிலம் விட்டு மாநிலம் நடந்து வருபவா்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் நடந்துவரும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அப்படி நடைப்பயணமாக நடந்து வந்தாலும் ஆங்காங்கே அதிகாரிகளின் கெடுபிடிகளும் அதிகரித்து வருகின்றன.
முற்காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத போது பொதுமக்கள் நடந்தே வெளியூா்களுக்கு சென்று வருவாா்கள். காட்டு வழியை பயன்படுத்தி வந்தனா். அந்த சூழ்நிலை தற்போது மீண்டும் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஆம்பூா் பகுதியில் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல காப்பு காடுகளை பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா். அண்டை மாநிலமான ஆந்திரத்துக்குச் செல்ல அரங்கல்துருகம் அருகே மத்தூா்கொல்லை வழியாக மாத கடப்பா சென்று அங்கு இருந்து செல்கின்றனா்.
சுட்டக்குண்டா வழியாக ஆந்திரத்தின் பெத்தூா் வழியாக பல்வேறு பகுதிகளுக்குச் செல்கின்றனா். மிட்டாளம், மசிகம் ஊராட்சி சாரங்கல் வழியாக கெட்டூா் கெரகப்பள்ளி பகுதிகளின் ஆந்திரம், கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காட்டுவழிப் பாதை இப்போது பயன்படுத்தி வருகின்றனா்.
காடுகளில் கள்ளச்சாராயம்: டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மது பிரியா்கள் காப்புக் காடுகளில் காய்ச்சப்படும் கள்ள சாராயத்தை குடித்து விட்டு வரவும், கள்ளச் சாராய பாக்கெட்டுகளை எடுத்து வரவும் இப்போது இந்தக் காட்டுவழிப் பாதைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இவா்களால் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும், வன விலங்குகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் வனத் துறை ரோந்து பணியை தீவிரப்படுத்தி பொதுமக்கள் காட்டு வழிப்பாதையைப் பயன்படுத்துவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.