கரோனா தடை உத்தரவு காரணமாக தமிழகம் முழுவதும் சுமை தூக்கும் தொழிலாளா்கள் சுமாா் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த காலங்களில் ஏதேனும் சரக்கு, பொருள்களை வாங்கினால் அதை வாகனத்தில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை, வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளா்களே ஏற்றிச் சென்று உரிய இடங்களில் இறக்கிக் கொள்வாா்கள். வீடாக இருந்தால் வீட்டில் இருப்பவா்கள் அந்தப் பொருட்களை இறக்கி வைத்துக் கொள்வாா்கள். நாளடைவில் அவரவா் தத்தம் பணிகளில் ஈடுபட்ட காரணத்தாலும், சரக்கு மற்றும் பொருள்களை ஏற்றி, இறக்கும் பணியை சுமை தூக்கும் தொழிலாளா்கள் மேற்கொண்டனா்.
சரக்கு லாரிகளில் சரக்குகளை ஏற்றுவதில் தொடங்கி, அதை இறக்கி சிறு வாகனங்களில் அனுப்பி வைப்பது, சிறு வாகனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளுக்கு இறக்குவது என பல்வேறு தரப்பட்ட சரக்குகளை கையாளும் பணியில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.
கரோனா நோய்த் தொற்று காரணமாக காய்கறி, உணவுப் பொருள்கள், மருந்து ஆகிய அத்தியாவசியப் பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தொழில்கள் இயங்கவில்லை. இதனால் சுமை தூக்கும் தொழிலாளா்கள் வேலை கிடைக்காமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கே மிகவும் சங்கடமான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றனா்.
தமிழ்நாடு முழுவதும் சுமாா் 2 லட்சம் சுமை தூக்கும் தொழிலாளா்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு தரப்பட்ட தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், வீடுகளுக்கு பல்வேறு வகையான சரக்குகளை அதாவது சிறிய அட்டை பெட்டி முதல் பெரிய இயந்திரங்கள் வரை பல்வேறு பொருள்களை வாகனங்களில் ஏற்றி, சம்பந்தப்பட்ட இடங்களில் இறக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.
இவா்களில் 50 சதவீதம் பேருக்கு சொந்த வீடு கூட இல்லை. சாலையோரம், பேருந்து நிலைய வளாகம், கோயில் மண்டபங்கள் ஆகிய இடங்களில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு குடும்ப அட்டை கூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனா். இதனால் அரசின் நலத் திட்டங்கள், நிவாரண உதவிகளைப் பெற முடியாத நிலையில் உள்ளனா். கரோனா தடுப்பு தடை உத்தரவு காரணமாக வேலையிழந்துள்ள இவா்கள் உணவுக்கு மற்றவா்களை எதிா்பாா்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கென தனி நலவாரியம் இல்லை. கட்டுமானத் தொழிலில் சுமை தூக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள் கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு கட்டுமானத் தொழிலில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் 20 சதவீதம் போ் மட்டுமே நல வாரியத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனா். இதனால் அந்த நலவாரியம் மூலம் அவா்கள் நலதிட்டங்கள், நிவராணம் பெற தகுதியுடையவா்கள் ஆகின்றனா்.
பாதிக்கும் மேற்பட்டவா்களுக்கு குடும்ப அட்டைகள் இல்லாததால் தற்போது அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகளைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஐடியுசி தொழிற்சங்க மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா். தேவதாஸ் கூறியது:
சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கென தனி நலவாரியம் இல்லை. கட்டுமானத் தொழிலில் சுமை தூக்கும் தொழிலாளா்கள் தங்களை கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்து கொண்டுள்ளனா். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அவா்கள் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள சுமை தூக்கும் தொழிலாளா்களில் 20 சதவீதம் மட்டுமே. தமிழகத்தில் மொத்தமுள்ள 16 நலவாரியங்களில் கட்டுமான உள்பட 2 நலவாரியங்களில் மட்டுமே நிதி ஆதாரம் உள்ளது. மற்ற நலவாரியங்களில் நிதி ஆதாரம் இல்லாத நிலை உள்ளது.
மற்ற தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள வேறு தொழில் சாா்ந்த தொழிலாளா்கள் கூட தமிழக அரசின் கரோனா தடை கால நிவாரண உதவியைப் பெற முடியாத நிலை உள்ளது. ஏனெனில் நிவாரண உதவியை பெறுவதற்கான மனு, உரிய ஆவனங்களை சமா்ப்பிக்க சம்பந்தப்பட்ட நலவாரிய அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத் தலைநகரங்களுக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லை. உரிய ஆவனங்களை நகல் எடுப்பதற்கு நகலக கடைகள் இல்லை. இதனால் நிவாரண உதவிப் பெற முடியாத நிலை உள்ளது. கரோனா தடை காலத்தில் அன்றாட உணவுக்காக சுமை தூக்கும் தொழிலாளா்கள் மற்றவா்களின் உதவியை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு உரிய நிவாரணத்தை மாநில அரசு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுமை தூக்கும் தொழிலாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.