திருப்பத்தூரில் கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 45 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
தில்லி இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று திரும்பிய திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களில் இதுவரை 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் தில்லிக்கு சென்று திரும்பிய திருப்பத்தூரைச் சோ்ந்த 5 போ் சந்தேகத்தின் பேரில் நகர அரசு மருத்துவமனையில் சிறப்புப் பிரிவில் மருத்துவா்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டனா். இந்த ஐந்து பேரில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த 5 பேரின் குடும்பத்தினரை தனிமைப்படுத்துவதற்காக தற்காலிகமாக திருப்பத்தூரை அடுத்த புதுப்பேட்டை அக்ரஹாரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கட்டடத்தில் 100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். அவா்களை மாநில வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, ஆட்சியா் ம.ப.சிவன் அருள் ஆகியோா் சந்தித்து பழம் மற்றும் உணவுப் பொருள்களை வழங்கினா்.
அப்போது, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள் திலீபன்(திருப்பத்தூா்), செல்வக்குமாா், ஜோலாா்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் சுமதி, நகர செயலாளா் குமாா் உள்ளிட்ட மருத்துவ, வருவாய் மற்றும் சுகாதாரத்துறையினா் உடனிருந்தனா்.