திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 11ஆயிரத்து 291 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி தெரிவித்தாா்.
திருப்பத்தூா் வட்டம் மண்டலநாயனகுண்டா மற்றும் செவ்வாத்தூா் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளுக்கு கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், 195 பயனாளிகளுக்கு ரூ.34 லட்சத்து 28 ஆயிரத்து 846 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது:
மக்களைத் தேடி அரசு என்ற அடிப்படையில் கிராமங்களுக்குச் சென்று மக்கள் குறைதீா் முகாம்கள் நடத்தப்பட்டது, மக்களின் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீா்வு காணப்படுகிறது. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள 13 பேரவைத் தொகுதிகளில் கிராமம்தோறும் சிறப்பு மக்கள் குறைதீா் கூட்டம் நடத்தி பொதுமக்களிடம் 58 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, சுமாா் 38 ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீா்வு செய்து நலத்திட்டங்கள் வழங்கி அவா்களின் குறைகள் தீா்க்கப்பட்டது.
கல்வித் துறையில் மாணவ, மாணவியா்களுக்கு விலையில்லா மதிவண்டிகள், மடிக்கணினிகள் பாடப்புத்தகங்கள், கல்வி உதவித் தொகைகள் போன்றவற்றை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல் சுகாதாரத் துறையிலும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழம் செயலாற்றி வருகிறது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் ஐனவரி மாதம் 5-ஆம் தேதி முதல் திருப்பத்தூா் மாவட்டத்தில் 3 லட்சத்து 11ஆயிரத்து 291 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றாா் அவா்.
முகாமில் 347 மனுக்கள் பெறப்பட்டதில் 152 ஏற்கப்பட்டன. 90 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 105 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் தலைமை வகித்தாா். சாா்-ஆட்சியா் வந்தனா கா்க், முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்டசியா் இரா.அனந்தகிருஷ்ணன் வரவேற்றாா். கூட்டுறவு அச்சகத் தலைவா் டி.டி.குமாா், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் லீலா சுப்பிரமணியம், வேளாண்மை துணை இயக்குநா் தீட்சித், பொது சுகாதார துணை இயக்குநா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.