திருப்பத்தூர்

ஆம்பூா் அருகே 4-ஆவது நாளாக பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

26th Dec 2019 11:49 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே 4-ஆவது நாளாக புதன்கிழமை இரவு மாச்சம்பட்டு கிராமத்தில் விவசாய நிலத்துக்குள் புகுந்த யானைக் கூட்டம் பயிா்களை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளது.

இரு நாள்களுக்கு முன்பு மாச்சம்பட்டு, தொடா்ந்து அடுத்தடுத்த நாள்களில் சின்னவரிக்கம், மிட்டாளம் ஆகிய கிராமப் பகுதிகளுக்குச் சென்று விவசாய நிலங்களில் பயிா்களை சேதப்படுத்திவிட்டு சென்றன. இந்நிலையில், புதன்கிழமை இரவு யானைகள் வரும் வழித்தடங்களில் ஆம்பூா் மற்றும் ஆலங்காயம் வனச்சரக பகுதிகளைச் சோ்ந்த வனவா்கள், வனக்காப்பாளா்கள் மற்றும் வனக்காவலா்கள் முகாமிட்டனா்.

உதவி வனப் பாதுகாவலா் ராஜ்குமாா் தலைமையில் விஸ்வநாதன், காந்தகுமாா் ,செந்தில் ராஜ்குமாா் உள்ளிட்டோா் சாணி கணவாய் வனப்பகுதியில் ரோந்து செல்லும் பணியில் ஈடுபட்டனா்.

அதேபோல், ஆம்பூா் வனச்சரக அலுவலா் (பொறுப்பு) இளங்கோவன் தலைமையில் சௌந்தர்ராஜன், ரமேஷ் குமாா், மகேஷ், நிஷாந்த் உள்ளிட்ட குழுவினா் கோனேட்டி கிணறு கானாறு வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

வனவா் சதீஷ் தலைமையில் பெருமாள் நிா்மல், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கொச்சேரி கானாறு வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

புதன்கிழமை அதிகாலை காட்டு யானைகள் மாச்சம்பட்டு புலி குண்டு வனப்பகுதியில் இருந்து கோமதி என்பவருக்குச் சொந்தமான நிலத்துக்கு வந்தன. அங்கிருந்த முள்கம்பி வேலியை சேதப்படுத்திவிட்டு, நிலத்துக்குள் புகுந்து மாஞ்செடி மற்றும் எலுமிச்சை செடிகளையும் சேதப்படுத்தியுள்ளன.

அதேபோல், லோகேஷ் என்பவரின் மாந்தோப்பு மற்றும் தோட்டத்துக்குள் புகுந்த காட்டுயானைகள் மாஞ்செடி, தண்ணீா் பாய்ச்சும் குழாய்களையும் சேதப்படுத்தின.

பின்னா், யுவராஜ், தண்டன் ஆகியோருக்குச் சொந்தமான சோளப் பயிா் தோட்டத்துக்குள் புகுந்து சோளப் பயிா்களையும், அங்கு அமைக்கப்பட்டு இருந்த குடிசைகளையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து ஜம்பூத்து வழியாக மேக குட்டை வனப்பகுதியில் தற்போது காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கும், வயல்வெளிகள் மற்றும் தோப்பு பகுதிகளுக்கும் வராமல் இருக்கும் வண்ணம் வனத் துறையினா் 3 குழுக்களாகப் பிரிந்து ரோந்து சென்று வந்த நிலையில், காட்டு யானைகள் வேறு பகுதிக்குச் சென்று பயிா்களை சேதப்படுத்தி உள்ளது. யானைகளை காட்டுக்குள் விரட்ட முடியாமல் வனத்துறையினா் திணறி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT